Thiruppavai 5: மார்கழி 5ஆம் நாள்... 5வது பாடல்... தாய்க்கு பெருமை சேர்த்தவரை வணங்கினாலே... ஆண்டாள் சொல்வது என்ன?

Thiruppavai 5: சூடி கொடுத்த சுடர் கொடியான ஆண்டாள், தாய்க்கு செய்ய வேண்டிய கைம்மாறு குறித்து ஐந்தாவது பாடலில் தெரிவித்துள்ளார்

Continues below advertisement

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் கண்ணனை போற்றி 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை இயற்றியுள்ளார்.

Continues below advertisement

திருப்பாவையின் 5வது பாடல் மூலம் ஆண்டாள் கூற வருவதை காணலாம்.

பாவங்கள் சாம்பலாகும்:

வியப்புக்குரிய செயல்களை செய்யக் கூடியவனை மாயோன் என அழைப்பர். வீட்டுக்கு உரியவனை மகன் என்றும், நாட்டுக்கே உரியவனை மைந்தன் என்றும் பெரியோர் அழைப்பர். 

எனவே மாயோனாகிய, மைந்தனாகிய, தூய நீரான யமுனை ஆற்றங்கரையில் பிறந்தவனாகிய, தாய்க்கு பெருமை சேர்த்தவனாகிய கண்ணனை வணங்கினால், இந்த ஜென்மத்தில் மட்டும் அல்லாது முன் உள் ஜென்மத்திலும் உள்ள பாவங்கள் யாவும், தீயில் எரிந்த சாம்பல் போல நீங்கி விடும் என ஆண்டாள் எடுத்துரைக்கிறார்.


இதே தன்மையை திருவள்ளுவர் சற்று வேறு வகையில் கையாளுகிறார். 

”மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல் எனும் சொல்”

இக்குறள் மூலம், மகனை பெறுவதற்கு தந்தை என்ன தவம் செய்தாரோ என உணர்த்துகிறது. அதாவது, தந்தைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மகன் இருக்க வேண்டும் என உணர்த்துகிறார்.

ஆண்டாள், திருப்பாவையில் தாய்க்கு பெருமை சேர்க்கும் வகையில் மகன் இருக்க வேண்டும் என உணர்த்துகிறார். ஆனால் இரண்டும் ஒரே உட்பொருளே குறிக்கிறது.

இப்பாடல் மூலம், வீட்டுக்கு உரிய மகனாக மட்டுமல்லாமல், ஊருக்கே நன்மை செய்யக்கூடிய மைந்தனாக இருக்க வேண்டும். தாயை நன்றாக கவனித்து கொண்டு, பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும், இவ்வாறு நடந்து கொள்ளும் போது, எந்த துன்பமும் நெருங்காது என குறிப்பால் ஆண்டாள் உணர்த்துகிறார். தாயை மிஞ்சிய சக்தி ஏது.....

இப்பாடலில், கண்ணனை வைத்து,  அணிகலன்களான சொற்கள் வைத்து நயம்பட தமிழை ஆண்டாள் கையாண்டுள்ளார். 

திருப்பாவை 5வது பாசுரம்:

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
  தூய பெருநீர் யமுனைத் துறைவனை 
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, 
  தாயைக் குடல்விளக்கஞ் செய்ததா மோதரனை, 
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது, 
  வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, 
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
  தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

பக்தி இயக்கம்:

கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

Also Read: Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்..." வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல" கண்ணனிடம் மழையை கேட்கும் ஆண்டாள்...வியக்க வைக்கும் அக்கால அறிவியல்..

Also Read: Margazhi 2022: மார்கழி முதல் நாள்.. முதல் பாடல்.. ஒரு கண்ணில் சூரியன், மறு கண்ணில் நிலவு... போற்றி பாடும் ஆண்டாள்...

Continues below advertisement
Sponsored Links by Taboola