திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி மாதம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிபாடு செய்தனர்.
திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில்
செங்கல்பட்டு (Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இன்று திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா திருப்போரூர் முருகன் கோயில், வட்டமண்டவதில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.
விமரிசையாக கொடியேற்றம்
அதனை தொடர்ந்து முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளித்தார். பின்னர், கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகச்சியாக வருகிற 21 ஆம் தேதி காலை 9 மணிக்குமேல் திருதேர் திருவிழா நடைபெற உள்ளது.
முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு மாட வீதிகள் வழியாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நான்கு மாடவீதிகளிலும் செல்வார்கள் வழி எங்கும் நீர் மோர் அன்னதானம் உள்ளிட்டை பக்தர்களுக்கு வழங்கி வருவார்கள். திருத்தேர் திருவிழாவை ஒட்டி ஓ.எம். ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும், இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
22 ஆம் தேதி பரிவேட்டை முருகப்பெருமான் ஆலத்தூர் கிராமம் சென்று அசுரர்களை வதம் செய்வார். மறுநாள் திருப்போரூர் ஆதி திராவிடர் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதி மக்கள் வழிபாடு செய்யும் வகையில் நீதிமன்றம் உத்தரவு படி இரண்டாம் ஆண்டாக முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் தொட்டி வாகனத்தில் வலம் வருவார் அன்றைய தினம் அப்பகுதி மக்கள் திருவிழாவாக கொண்டாடி முருகப்பெருமானை வழிபாடு செய்வார்.
24 ஆம் தேதி மாலை 7 மணிக்கு மேல் தெப்ப உற்ச்சவம் முருக பெருமான் குதிரை வாகனம் மத்தியில் தெப்ப குளத்தில் வளம் வருவார். 27 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.