மதுரை திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா. பக்தர்களுக்கு கதம்ப சாப்பாடு பிரசாதமாக வழங்கப்படும்.

 

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்


 

Thiruparankundram murugan: திருப்பரங்குன்றம் திரு+பரம்+குன்றம். பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழி. தமிழ் கடவுள் முருகனுக்கு ஆறு படைவீடுகள் உள்ளது. அதில் முதல் வீடு என்னும் சிறப்பை பெற்றது. திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம். இத்திருத்தலம் மதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.

 

மலை மேல் வேல் எடுக்கும் திருவிழா


முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா, கந்தசஷ்டி விழா, பங்குனி திருவிழா உள்ளிட்ட திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். இதில் மலை மேல் வேல் எடுக்கும் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் சார்பில் விவசாயம் செழிக்க வேண்டியும், நக்கீரர் சாபவிமோசனத்தை நினைவு கூறும் வகையிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

தங்க வேலுக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம்


ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை கொண்டாடப் படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள தங்க வேலுக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரித்து பல்லக்கில் வைத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வேல் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் தீர்த்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வேலுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அங்குள்ள குமரருக்கு சுப்பிரமணிய சுவாமியின் தங்கவேல் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

 

கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது


தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு வேல் கொண்டு வரப்பட்டு, அங்கு பழனி யாண்டவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்று, சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. மாலை வரை வேல் பழனி ஆண்டவர் திருக்கரத்தில் இருக்கும். இரவு 7 மணியளவில் பூ பல்லக்கில் வேல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்ரமணியசுவாமி திருக்கரத்தில் சேர்க்கப்பட்டது.

ஏன் முருகனின் வேலுக்கு தான் அபிஷேகம் தெரியுமா?



முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான இங்கே மட்டும் தான் முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. திருப்பரங்குன்றம் முருகன் குடைவரைக் கோயிலில் உள்ளதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கு தான் அபிஷேகம் நடக்கும். புரட்டாசி மாதம் கடைசி வெள்ளி அன்று தான் இந்த வேல் திருவிழா நடைபெறும். சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால் வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.