திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்

 

Thiruparankundram: 'குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்' - என்பார்கள். முருகனின் முதல்படை வீடே பெரிய குன்றாக தான் இருக்கிறது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக இருக்கக்கூடிய திருப்பரங்குன்றம், மதுரை நகர் பகுதியில் இருந்து சற்று ஏறக்குறைய ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாண்டிய மன்னர்கள் காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட குடவரைக் கோயிலாக அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திகழ்கிறது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸ்தலமாக பார்க்கப்படக்கூடிய நிலையிலே மலையை குடைந்து கர்ப்ப கிரகம் வரை மலைப் பகுதிக்குள்ளேயே இருக்கக்கூடிய ஒரு கோயிலாக இந்த கோவில் இருந்து வருகிறது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலை பொருத்தவரை சஷ்டியின் போது ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சூரசம்கார நிகழ்வுகளில் கலந்து கொள்வது வழக்கம். அதே போன்று மலையை சுற்றி இருக்கக்கூடிய கிரிவலப் பாதையில் நடைபெறும் தேரோட்டமும், முருகன் கோயிலுக்குள் நடைபெறும் வேல் வாங்கும் நிகழ்வும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து முருகனின் அருளை பெற்று செல்வது வழக்கம். இவ்வாறாக ஆன்மீக ஸ்தலமாக பார்க்கப்பட்டு வரக்கூடிய திருப்பரங்குன்றத்தில் பல்வேறு தொல்லியல் எட்சங்கள்  நிறைந்திருப்பது இன்றைய இளைய  சமுதாயத்தினருக்கு தெரியாத ஒரு நிலை இருந்து வருகிறது.

 

காசி விசுவநாதர் ஆலயம்

 

முருகன் கோயிலில் இருந்து செல்லக்கூடிய கிரிவல பாதையில் சரவண பொய்கைக்கு அருகிலே அமைந்துள்ளது தான் காசி விஸ்வநாதர் ஆலயம். மலை மேல் இருக்கக்கூடிய இந்த கோயிலுக்கு செல்வதற்காக தனி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வற்றாத ஒரு சுனை இங்கே உள்ள நிலையில் விசேஷ நாட்களில் பக்தர்கள் இங்கே சென்று சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் முருகப்பெருமானுடைய வேலுக்கு இங்கே அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் வரும் பக்தர்கள் தவறாது இந்த கோயிலுக்கும் படிக்கட்டுகளிலேயே ஏறி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்துவிட்டு வருகின்றனர். இந்த கோயில் பகுதிகளிலும் வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கக்கூடிய சிற்பங்கள் அமையப்பெற்றுள்ளன.

 

குகை கோயில்

 

திருப்பரங்குன்றத்தில் தென்பகுதி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வடக்கு நோக்கி இருந்தாலும் அதனுடைய மறுப்பகுதியான தென்பகுதியிலும் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. சுற்றிலும் மரங்கள் நிறைந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அமர்ந்து இளைப்பாறக்கூடிய ஒரு பகுதியாக இருந்தாலும் கிரிவலம் செல்லக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது தான் இந்த குகை கோயில். மலையை குடைந்து குடைவரைக் கோயிலாக காட்சியளிக்கும் இந்த கோயிலில், முருகன் வள்ளி தெய்வானையோடு இருக்கும் சிலைகள் சிதைந்த நிலையில் காணப்படும். நடராஜர் சிலை மற்றும் நவ விநாயகர் சிற்பங்கள், பைரவர் போன்ற அமைப்புடைய சிலைகள் சிதைந்த நிலையில் இருக்கும். விநாயகர் சிலை உள்ளிட்ட  ஏராளமான சிற்பங்கள் இங்கே அமையப்பெற்றுள்ளன.

 

திருப்பரங்குன்றம் தேர் திருவிழா

 

சுப்பிரமணியருக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 15 நாட்கள் தேர் திருவிழா நடைபெறும். கொடியேற்றத் துடன் துவங்கும் இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கைபாரம் நிகழ்ச்சி, பவுர்ணமி பங்குனி உத்திரம் நடைபெறும். முக்கிய நிகழ்வாக பட்டாபிஷேகம், அதனை தொடர்ந்து திருக்கல்யாணம் மற்றும் தேர் திருவிழா நடைபெற்று தீர்த்தம் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும் என்பது குறிப்பிடதக்கது.

 

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள முருகனின் முதல் படை வீட்டான திருப்பரங்குன்றம் கோயிலுக்கு கண்டிப்பா தரிசனம் செய்யுங்கள்.