செங்கல்பட்டு மாவட்டம்  திருக்கழுக்குன்றம் அருகே கத்தி ஏறுதல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அரோகரா கோஷமீட்டு, பக்தர்கள் மெய்சிலிர்த்து நின்றனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

 

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய விழா ( sri muthumari amman temple )

 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட லட்டூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 14 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இப்பகுதியில் மிக முக்கிய ஆலயமாக முத்துமாரி அம்மன் ஆலயம் விளங்கி வருகிறது. இவ்விழாவில் சிறப்பு அம்சமாக நேற்று முன்தினம் காப்பு கட்டும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அம்மனுக்கு நேற்று கடன் செலுத்துபவர்கள், விரதம் இருந்து காப்பு கட்டிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவில் மிக முக்கிய விழாவாக, கத்தியறுதல் திருவிழா பார்க்கப்படுகிறது .

 

 


கத்தியை படிக்கட்டாகி, உச்சியில் ஏறிய பக்தர்கள்


 

கத்தியறுதல் திருவிழா

 

காப்பு கட்டும் விழாவை தொடர்ந்து நேற்று, நள்ளிரவு கத்தியறுதல் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் கோயில் அருகே 11 கத்திகளை கொண்ட ஏணி போன்ற அமைப்பு அமைக்கப்பட்டு நடப்பட்டது. அதில் பக்தி பரவசத்துடன் சாமி ஆடும் பக்தர்கள் கத்தியில், ஏறி நின்று அருள்வாக்கு அளித்தனர். பிறகு கூடைலிருந்த பழம் மற்றும் பூக்களை வீசி தரிசனம் செய்தனர்.

 

 


கத்தியை படிக்கட்டாகி, உச்சியில் ஏறிய பக்தர்கள்


கத்தி ஏறுதல் திருவிழா என்பது, வித்தியாசமான விழா என்பதால் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். திருவிழாவின் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

 


கத்தியை படிக்கட்டாகி, உச்சியில் ஏறிய பக்தர்கள்


 

 

கூழ்வார்த்தல் திருவிழா

 

 

மேலும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று  கூழ்வார்த்தல் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து  தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.  இந்நிகழ்வில், லட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி சுகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள்,கோவில் நிர்வாகிகள்,என பலர் கலந்து கொண்டனர்.