திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் 13ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 13ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா 18ம்தேதி நடக்கிறது. 19ம்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. உலக பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகம், விடுதிகள், தனியார் விடுதிகள், சமுதாய விடுதிகளில் தங்கியிருந்து விரதமிருப்பது தனி சிறப்பாக கருதப்படுகிறது. இந்த விழா நடக்கும் 7 நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டும் கோயில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க அனுமதி வழங்கப்படவில்லை.

வெளியூர் மற்றும் உள்ளுர் பக்தர்கள் கோயில் விடுதியில் தங்கி விரதமிருப்பது வழக்கம். ஆனால் கடந்த 2017ம் ஆண்டு கோயில் கிரி பிரகார மேற்கூரை இடித்த பின்னர் கோயில் விடுதிகள் பலமிழந்து விட்டதாக கூறி கோயில் விடுதிகள் அகற்றப்பட்டன. 308 விடுதிகள் இடிக்கப்பட்டன. அதன்பின்னர் சுமார் ரூ.30 கோடி மதிப்பீட்டில் யாத்ரீகர் நிவாஸ் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் இந்த சஷ்டி திருவிழாவிற்கு முன்பு திறக்கப்படும் என கூறப்படுகிறது.
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகிறது. இதனால் கோயில் வளாகம் பகுதியில் கட்டுமான பணிகள் நடப்பதால் பக்தர்கள் தங்குவது சிரமமாக இருக்கும் கூடும் என பக்தர்கள் கருதுகின்றனர். ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் வளாகத்தில் காலியாக இருக்கும் இடங்களில் தகர கொட்டகை செட் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாழிக்கிணறு பஸ் ஸ்டாண்ட் பகுதி, கிழக்கு கிரி பிரகாரம், சண்முக விலாசம் மண்டபம் எதிரே நாழிக்கிணறு செல்லும் நடைபாதை வலதுபுறம், வெள்ளை கல் மண்டபம், அனுகிரகம் மண்டபம் இருபுறம், இணை ஆணையர் அலுவலகம் எதிரே உள்ள பகுதி உள்ளிட்ட இடங்களில் பிரமாண்டமான முறையில் தகர கொட்டகை அமைக்கும் நடந்து வருகிறது. மொத்தம் சுமார் ஒன்றரை லட்சம் சதுர கிலோ மீட்டர் அளவில் தகர கொட்டகை அமைக்கப்படுகிறது. மழைகாலம் என்பதால் தரைதளத்தில் மரப்பலகைகளால் தரைத்தளம் அமைக்கப்படுகிறது இதனால் மழை வந்தாலும் மழைநீர் செல்லும் வகையில் பிரத்யேகமாக மரப்பலகைகளால் தளம் அமைக்கபட்டு வருகிறது.
இந்த தகர செட்டுகளுக்கு தனித்தனியே குளியலறை மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.
கோயில் வடக்கு டோல்கேட் பகுதியில் உள்ள கலையரங்கம் கட்டுமான பணிகளுக்காக அகற்றப்பட்டதால் தற்காலிக கலையரங்கம் தகர செட்டால் அமைக்கப்பட்டுள்ளது.
சஷ்டி விழாவில் கோயில் வளாகத்தில் சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர நகருக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு ஆங்காங்கே தற்காலிக குளியலறை மற்றும் கழிப்பிட வசதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மூவர் சமாது, அய்யாவழி கோயில் பக்தர்கள் அருகே பக்தர்கள் குளிப்பதற்கு குடிநீர் தொட்டிகள் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹார நடக்கும் கோயில் கடற்கரை பகுதி முழுவதும் ஜேசிபி இயந்திரம் சுத்தப்படுத்தும் பணி கடந்த இரண்டு நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது. அசுத்தமான மணல்கள் அகற்றப்பட்டு சுத்தமாக்கும் பட்டு வருகிறது.
கோயில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் நகரின் வெளிப்பகுதியில் காலியாக உள்ள இடங்களில் வாகன நிறுத்துமிடம் தயார் செய்யப்பட உள்ளது. நகரில் திருவிழா நடக்கும் நாட்களில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் செல்லும் மூன்று வழிகளிலும் வெளியே வாகனங்களை நிறுத்த ஆலோசிக்கப்படுகிறது. இந்த விழாவில் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்பி பாலாஜி சரவணன் கோயில் வளாகத்தில் ஆய்வு செய்தார். கோயில் கோயில் கிரி பிரகாரம், கோயில் கடற்கரை வளாகம் பகுதிகள், நாழிக்கிணறு பஸ் ஸ்டாண்ட், ராஜ் கண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது, கந்த சஷ்டி திருவிழா கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து வசதிகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்வது, கந்தசஷ்டி திருவிழாவிற்கு 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் , முக்கிய இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது, 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கபட உள்ளது. பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் பார்க்கிங் வசதி செய்யப்படும் என்றார்.