கந்த சஷ்டி விரதமிருந்து இவ்வாறு முருகனை வழிபட்டால் வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று காலம் காலமாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கந்த சஷ்டி விரதம்  இருக்கின்றனர். சஷ்டி விரத பலன்கள் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி.


கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.


இந்த ஆண்டு கந்தசஷ்டி விரதம் வரும் 13 ஆம் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கோயிலில் மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்த விழாவிற்காக லட்சக்கணக்கான மக்கள் பால்குடம், காவடி எடுத்து வருவார்கள். கந்தசஷ்டி திருவிழா நடைபெற இருப்பதால் சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் அல்லது விரதம் இருந்து திருவிழாவில் கலந்துக்கொள்ள வரும் பக்தர்கள் ஜாதி ரீதியிலான உடைகளை அணிய கூடாது என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சாதி தலைவர்கள் அல்லது குறிப்பிட்ட சாதியை குறிக்கும் வகையில் ஜெர்ஸி டி-ஷர்ட், கரை வேட்டி ஆகியவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மேலும், காவல்துரையினருக்கான பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நடைபெறுவதையொட்டி திருக்கோயில்களில் பக்தர்களின் வருகையினை சீர்படுத்திடவும், தரிசன முறைகளை நெறிப்படுத்திடவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிடுதல் போன்ற அனைத்து பணிகளையும் கண்காணித்திட மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களை சிறப்பு பணி அலுவலர்களாக (15.11.2023 முதல் 19.11.2023 வரை) நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது.


தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி மண்டலங்களில் உள்ள ஆய்வர்கள் மற்றும் செயல் அலுவலர்களை (மண்டலங்களில் திருவிழாக்கள் நடைபெறும் திருக்கோயில்களை அனுசரித்து) மண்டல இணை ஆணையர்கள் கந்தசஷ்டி திருவிழாவினையொட்டி 15.11.2023 முதல் 19.11.2023 வரை சிறப்பு பணிபுரிய உத்தரவு பிறப்பித்து, அவ்வுத்தரவின் நகலை திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலருக்கும். இவ்வலுவலகத்திற்கும் 07.11.2023-க்குள் அன்று அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது. சிறப்பு பணி அலுவலர்கள் திருக்கோயிலுக்கு வருகை புரியும்போது உடன் (Walkie Talkie) வாக்கி டாக்கியை தவறாமல் கொண்டு வரவும். மற்றும் தங்களுடன் தங்கள் அலுவலக பணியாளர்கள் இருவரை உடன் அழைத்து வருமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


மேலும், இவ்வுத்தரவில் குறிப்பிட்டுள்ள சிறப்பு பணி அலுவலர்கள் மற்றும் மண்டல இணை ஆணையர் மூலம் பெறப்படும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் ஆகியோர்களுக்கு உரிய பணியினை ஒதுக்கீடு செய்து சுழற்சி முறையில் பணியமர்த்திட திருச்செந்தூர், இணை ஆணையர் / செயல் அலுவலரைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.