பழங்கால மரபுக்கும் வரலாறுக்கும் இன்றும் நிலவும் சான்று தான் கன்னி தெய்வம் வழிபாடு.ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மனம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால் அந்தப் பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. 




                                                                                    கன்னி தெய்வம்


குடும்பத்தின் தகப்பனார் வழி உறவில் பிறந்து திருமணம் ஆகாமல் சிறு குழந்தையிலேயே இறந்து போன பெண் தான் நம் வீட்டின் கன்னி தெய்வமாக இருக்கிறது என்பது ஐதீகம். ஒவ்வொரு குடும்பத்திலும் திருமணம் ஆகாமல் யாராவது சிறு பெண்கள், குழந்தைகள் எத்தனையோ தலைமுறைக்கு முன்னர் ஒருவராவது இறந்திருப்பார்கள். அவர் தெய்வமாகி நம் வீட்டையே பாதுகாத்து வருவதாக நம்பிக்கை.


பலரது வீட்டில் அவர்கள் குடும்பத்தில் வரும் பெரிய ஆபத்துக்களில் இருந்தும் வீட்டில் நடக்கும் சின்ன பிரச்சனைகள் வரை பெரிதாக பூதாகரம் ஆகாமலும், அப்படியே ஆனாலும் அந்த பிரச்சனையை சமரசமாக ஆக்கி கொண்டு வரும் சக்தி உடையது வீட்டின் கன்னி தெய்வம். இந்தக் கன்னிகள் பெரும்பாலும் தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள்.


கன்னித்தன்மையைக் கொடுத்து தாய்மையைப் பரிசாகப் பெறாமலேயே இறந்தவர்கள்.இதனாலேயே சராசரி பெண்கள் ரட்சிக்கும் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள். பெரும்பாலும் இறைவழிபாட்டுக்கு இணையான வழிபாடாக கன்னி தெய்வ வழிபாடுகள் போற்றப்படுகின்றன.


                                                     கன்னிக்கு என்றே தனிமூலை- கன்னி மூலை




ரிக் வேதத்திலும், மார்க்கண்டேய புராணத்திலும், காளிதாசரின் குமார சம்பவத்திலும், விஷ்ணு தர்மோத்தர புராணத்திலும், தேவி பாகவதத்திலும் கன்னிமார்களின் வரலாறு போற்றப்படுகிறது. பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னி மூலை (தென்மேற்குப் பகுதி), அக்னி மூலை (தென்கிழக்குப் பகுதி), வாயு மூலை (வடமேற்குப் பகுதி), ஈசானி மூலை (வடகிழக்குப் பகுதி) என்று பிரித்துக் கூறுவதுண்டு.


இதுவே இன்று வாஸ்து சாஸ்திரமாகக் கூறப்படுகிறது. வீட்டின் தென்மேற்கு பகுதியே கன்னி மூலைப் பகுதியைத் தெய்வத்திற்கு உரிய இடமாகக் கருதி அங்கு நான்குமுக குத்துவிளக்கேற்றி வழிபடுவது தொன்று தொட்டு இருந்துவரும் மரபாகும்.


                                                 கன்னி தெய்வத்தை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்




 
சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் யோகம் கைகூடும் என்று பொதுவான நம்பிக்கை இருப்பதாலே கன்னியை வணங்கும் வழக்கம் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.கன்னி தெய்வம் வழிபாடு குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும் வழிபாடாகும். இந்த வழிபாட்டிற்காகவே வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்தினரை ஒன்று சேர்வர். குடும்ப ஓற்றுமைக்கு இந்த கன்னி வழிபாடு ஒரு சான்றாகும்.


வீட்டில் அண்ணன் தம்பி என்று உறவு முறைகள் அனைவரும் ஒன்றாக நின்று தம்மை வணங்க வேண்டும் என ஆசைபடுவாள். அப்படி வணங்கும் போது மனம் குளிர்ந்து அவர்களுக்கு வேண்டும் வரம் கொடுப்பார். பிறந்த குழந்தை திடீர் திடீரென அழுதால் கூட கன்னிக்கு பூஜை வைக்கவில்லை என்று கன்னி பயங்காட்டுகிறது என கிராமத்தில் பெரியவர்கள் சொல்லுவதை தற்போதும் காணலாம். கன்னி தன் தேவைகளை குழந்தை மூலமாக பூர்த்தி செய்து கொள்கிறது.


                                                                  கன்னி பூஜை செய்ய உகந்த நாட்கள்




 
கன்னி தெய்வத்தை வழிபட நான்கு முக விளக்கேற்றி தினமும் காலை மாலையில் வணங்கலாம். குறிப்பாக மாலையில் கன்னி விளக்கேற்றும் இடத்தை கன்னிப்பதி என்றே அழைக்கின்றனர். இதில் கன்னி மூலை எனப்படும் தென் மேற்கு மூலையில் விளக்கு வைத்து கிழக்கு முகமாக விளக்கேற்ற வேண்டும் என கூறும் பெரியோர்கள் கன்னிப்பதியில் உலக தெய்வத்தின் வழிபாடு வேண்டாம் என்கின்றனர்.


இந்த தெய்வங்களுக்கு ஆடி 30 அல்லது ஆடி கடைசி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பான பூஜைகள் செய்வது வழக்கம். எனவே அந்த நாளில் வணங்குவதை பலர் கடைபிடித்து வருகின்றனர். பிச்சிப்பூ, மரிக்கொழுந்து போன்ற மலர்கள் கொண்டு அலங்கரித்து கன்னி தெய்வத்தின் வயதிற்கு ஏற்ப அவர்களுக்கு உடை எடுத்து வைப்பார்கள். இந்த பூஜை செய்யும் போது பெண்கள் பயன்படுத்தும் பொட்டு, வளையல், ரிப்பன், பாவாடை சட்டை , பாவாடை, தாவணி , சேலை சட்டை  , மஞ்சள், குங்குமம், போன்ற பொருட்களை படையலாக வைத்து வழிபாடு செய்வார்கள்.


                                                                                        கன்னி பெட்டி




கன்னி பெட்டி என்பது பனை ஓலையில் செய்யக்கூடிய ஒரு பெட்டி ஆகும். அந்தப் பெட்டிக்குள்ளேயே நாம் வணங்கக்கூடிய கன்னி தெய்வத்திற்கான துணி, வளையல், சீப்பு, கண்ணாடி, ரிபன், கேர்ப்பின், ஐடைமாட்டி, பவுடர், பொட்டு, மஞ்சள்பொடி போன்ற அனைத்து பொருட்களும் உள்ளே வைத்து நம் வீட்டில் உள்ள மேல் பகுதியில் கூரையிலோ அல்லது மேல்பகுதி உள்ள ஒரு கன்னி முக்கு பகுதியில் கட்டி வைக்கப்படும்.முதலாண்டு வைத்து படைத்த கன்னிப்பெட்டியை மறு ஆண்டுதான் எடுப்பார்கள்.




கன்னி பெட்டியை அதிகாலையில் எடுக்கும் போது வீட்டை சுத்தம் செய்வார்கள். கன்னிப் பெட்டியைத் திறக்கும் போது, அதில் கடந்த ஆண்டு வைத்த மஞ்சள் முளை விட்டிருந்தால், கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. அதற்குள் வைத்திருந்த துணியை குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு உடுத்தக் கொடுப்பார்கள். துணியை தனது வீட்டில் மணமாகாத பெண்ணுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்கள் திருமணம் முடித்து சென்று விட்டால் வேறு வீட்டுக்கு வரும் மருமகளுக்கு வழங்குவார்கள்.


சர்க்கரை பொங்கல், பனியாரம், அதிரசம் என இனிப்பு பலகாரம் கன்னிகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் படைப்பில் இனிப்பு வகைகள் கண்டிப்பாக இடம்பெறும் சாம்பிராணி புகை, ஊதுபத்தி, கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். கன்னி தெய்வத்துக்கு  நான்கு முக விளக்கேற்ற வேண்டும். அதன் பின் வடை பாயாசத்துடன் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.இந்த விருந்து கன்னி வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.