முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. மற்ற முருகன் கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பிரம்மோற்சவம் நடைபெறும். ஆனால், இங்கு ஆவணித்திருவிழா மற்றும் மாசித்திருவிழா என இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும். முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தான ராஜா, உள்ளூர் மக்களின் தரிசனத்திற்காக நடத்தப்பட்ட மூலத்திருவிழாதான் ஆவணித் திருவிழா.
மாசித்திருவிழாவைப்போல ஆவணத்திருவிழாவும் 12 நாள்கள் நடைபெறும். ஆனால், குமரவிடங்கப்பெருமான் பெரியதேரில் வலம்வருதலுக்குப் பதிலாக சிறியதேரில் வலம் வருவார். தெப்ப உற்சவமும் நடைபெறாது. ஆவணித் திருவிழா தேய்பிறை நாள்களிலும், மாசித்திருவிழா வளர்பிறை நாள்களிலும் நடைபெறும். ஆவணித்திருவிழாவில் சிறிய தேரில் குமரவிடங்கப்பெருமானுடன் வள்ளியம்பிகையும், மாசித்திருவிழாவில் பெரிய தேரில் தெய்வானை அம்பிகையும் வலம் வருவார்.
இங்கு சுவாமி ஷண்முகர், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் அதாவது படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும் புரியும் பிரம்மா, விஷ்ணு ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாய் அருள்பாலிப்பவர். அவரை அந்த வடிவத்திலேயே வழிபடும் திருவிழா ஆவணித் திருவிழா.
இந்தத் திருவிழாக்களில் 7வது, 8வது நாள் திருவிழாக்கள்தான் மிகச் சிறப்பானவை. 7-ம் நாளில் வெட்டிவேர் சப்பரத்தில் கோயிலுக்குள் இருந்து புறப்படும் சண்முகர், 8-ம் நாள் திருவிழா முடிந்துதான் மீண்டும் கோயிலுக்குள் செல்வார். இந்த நாள்களில்தான் ஷண்முகர் வெள்ளை சாத்தி, சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி என்னும் திருக்கோலத்தில் காட்சி தருவார். இதுதான் இந்தத் திருவிழாவின் சிறப்பு அம்சம். ஷண்முகர் முழுக்க இந்த நிறங்களை ஒவ்வொன்றாகத் தாங்கி பிரம்மா, விஷ்ணு, சிவனாகக் காட்சி அருள்வதாக ஐதிகம்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 13-ம் தேதி நடைபெற இருக்கிறது. திருவிழா நாள்களில் தினமும் மாலை சுவாமி குமரவிடங்கப் பெருமான் வெவேறு வாகனங்களில் அம்பிகைகளுடன் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெறுகிறது.
இந்தாண்டு ஆவணித் திருவிழா, வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 23-ம் தேதி திருக்கோயில் யானை தெய்வானை மீது கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட இருக்கிறது. 24-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டு தீபாராதனை நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு அப்பர் சுவாமிகள், திருக்கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு ரத வீதிகளில் உழவாரப் பணி செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.இரவில் ஸ்ரீபெலிநாயகர், அஸ்திரத் தேவருடன் பல்லக்கில் 9 சந்நிதிகளில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழா நாள்களில் தினமும் மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருவார்கள். முக்கிய நிகழ்ச்சியாக 30-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகரின் உருகுசட்ட சேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து சுவாமி சண்முகர், வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருள்வார். மாலை 4.30 மணிக்குத் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருள்கிறார். 31-ம் தேதி காலை 5 மணிக்குப் பெரிய வெள்ளைச் சப்பரத்தில் வெள்ளை சாத்தியிலும், காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகங்களுக்குப் பிறகு கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தியில் எழுந்தருளி உலா வருதல் நடைபெற இருக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.