அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைப்பிடிக்க வேண்டும் ரசாயனம் கலந்த தண்ணீரோ அல்லது பால் தயிர் கலந்த தண்ணீரை  அடிக்கக்கூடாது கட்டுப்பாடுகளை விதித்து நீதிமன்றம் உத்தரவு.

 

சித்திரைத் திருவிழா

 

சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன், மதுரையைச் சேர்ந்த ரமேஷ்  ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். அவற்றில், "சித்திரைத் திருவிழாவின் போது போதுமான அளவு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், மொபைல் மருத்துவ சேவைகளை வழங்கவும் உத்தரவிட வேண்டும். குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்படுவதையும் உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சித்திரைத் திருவிழாவிற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  நீதிபதிகள் சித்திரைத் திருவிழா தமிழகமே கவனிக்கும் ஒரு விழாவாக உள்ளது.

 

நீதிமன்றம் திருப்தி

 

வைகை ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் புதிதாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது பொதுமக்கள் எளிதில் சென்று வரும் வகையில் இம்முறை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக நேற்று வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நீதிபதிகள் அறிவுறுத்தியதால் தற்போது வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளன. தாழ்வாக செல்லும் மின்கம்பங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அவசர மருத்துவமனை சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தியை அளிக்கிறது.

 

உத்தரவு

 

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ள இடம் சிறியது என்பதால் கோவில் நிர்வாகம் தரப்பில் வழங்கப்பட்டிருக்கும் 2000 பாஸ்கள் மற்றும் 400 பேட்ச் அணிந்தவர்கள் என மொத்தம் 2400 பேர் மட்டுமே வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் பாஸ் மற்றும் பேட்ச் அணிந்தவர்கள் மட்டுமே இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் உடன் யாரையும் அழைத்துச் செல்லக்கூடாது. காவல்துறையினர் இந்த விவகாரத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது. இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். கள்ளழகரின் மீது நீர் பீய்ச்சுவதை பக்தர்கள் நேர்த்தி கடனாக செலுத்துகின்றனர் ஒரு சிலர் மட்டுமே அதனை தவறாக பயன்படுத்த வருகின்றனர். அது போன்று நடவடிக்கை தடுக்கப்பட வேண்டும் பாரம்பரிய முறையில் தோற்பையில் கைகளால் உருவாக்கப்படும் விசையை பயன்படுத்தி மட்டுமே தண்ணீரை பீச்ச வேண்டும் அது தவிர்த்து பிரஷர் பம்புகள் உள்ளிட்ட வேற ஏதேனும் இயந்திரங்களை பயன்படுத்தினால் அவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.