தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி 21ம் ஆண்டு விழா (நேற்று) 18ம் தேதி தொடங்கியது.
பெரிய கோயில் என அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. பிரகதீஸ்வரர் கோயில் இதற்கு முன்பு ராஜராஜேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. தற்போது அழைக்கப்படும் இந்த பிரகதீஸ்வரர் எனப்படும் பெயரானது மராட்டியர்களால் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கோயிலை மகா சிவன் கோவில் என்றும் அழைத்து வந்துள்ளனர்.
இத்தகைய பெருமை பெற்ற தஞ்சை பெரியகோவிலில் வராகி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராகி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா (18ம் தேதி) காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து வராகி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இரவு கோவில் வளாகத்திற்குள் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இன்று மஞ்சள் அலங்காரமும், நாளை 20ம் தேதி குங்குமம் அலங்காரமும், வரும் 21ம் தேதி சந்தன அலங்காரமும், 22ம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 23ம் தேதி மாதுளை அலங்காரமும், 24ம் தேதி நவதானிய அலங்காரமும், 25ம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 26ம் தேதிகனி அலங்காரமும், 27ம் தேதி காய்கறி அலங்காரமும் 28ம் தேதி புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது.
இதேபோல் திருக்காட்டுப்பள்ளி கோட் காளியம்மன் கோயில் ஆனித் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.
விழாவை முன்னிட்டு காலை அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள் பொடி, திரவிய பொடி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு ஹோமங்கள் செய்து காப்பு கட்டுதல் நடைபெற்றது.
இரவு அம்மன் (உற்சவர்) அன்னபட்சி வாகனத்தில் சிறப்பு புஷ்ப அலங்காரங்களுடன் வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க திருக்காட்டுப்பள்ளி வட்டார தலைவர் தர்மராஜ், செயலர் முனியராஜ், பொருளாளர் செழியன் ஆகியோர் செய்திருந்தனர். பூஜைகளை கோவில் அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார், கும்பகோணம் ஸ்ரீ கும்பேஸ்வரர் கோயில் அர்ச்சகர் தண்டபாணி சிவாச்சாரியார் ஆகியோர் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்,