திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோவில் வரலாறு ( thiruporur kandaswamy temple )

 

புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் மிக முக்கிய முருகர் கோவில்களில் திருப்பூரில் கந்தசாமி கோவிலும் ஒன்று. கந்தபுராணக் கூற்றுப்படி, முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். அவை முறையே திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர் ஆகும். திருச்செந்தூரில் கடல் மார்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இத்திருத்தலத்திலேயே முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றதாக நம்பப்படுகிறது. திருக்கோவில் வரலாற்றுப்படி, முருகப்பெருமான் மதுரை மாநகரிலிருந்த, சிதம்பரம் அடிகளாரின் கனவில் தோன்றியதாகவும், தான் திருப்போரிலுள்ள பனை மரத்தினடியில், கேட்பாரற்று இருப்பதாக கூறி மறைந்ததாகவும், கடவுள் உரைத்தபடியே சிதம்பரம் அடிகளார் திருப்போரூர் வந்தடைந்தார். முருகப்பெருமானின் சிலையை மீட்டெடுத்து, திருக்கோவில் அமைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.



சுயம்பு மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்

 

தந்தை சிவபெருமானை போலவே,  திருப்போரூர் முருகன் சுயம்பு மூர்த்தமாக, தோன்றியவர் என்கிறது தல புராணம். சுயம்பு மூர்த்தியாக தோன்றி இருப்பதால் இக்கோவிலில் அபிஷேகம் நடைபெறுவதில்லை. மூலவருக்கு பதிலாக, ஸ்ரீசுப்ரமண்யர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்த்ரத்தில் கந்தக் கடவுளின் திருநாமங்கள் சுமார் 300க்கும் மேலாகப் பொறிக்கப்பட்டு உள்ளன. எனவே, யந்த்ரத்துக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.



 

அரிய அம்சத்துடன் பக்தர்களுக்கு காட்சி

 

திருப்போரூர் கந்தசாமி முருகப்பெருமான், மற்ற தலங்களை போல் அல்லாமல், அட்சமாலையை கையில் ஏந்தியபடி, திருமாலைப் போல இடது கரத்தை தொடையில் வைத்தபடி சிவனாருக்கே, உரிய அபய ஹஸ்த முத்திரையுடன் மும்மூர்த்திகளின் அம்சமாத் திகழ்கிறார். இந்த கோயிலின் தல மரம் வன்னி மரம் ஆகும். இக்கோயிலில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல் தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் எழுந்தருளியிருப்பது சிறப்பு அம்சமாகும். 

 

செவ்வாய் தோஷம் இருந்தால்..

 

பலமுறை பல்வேறு காலகட்டத்தில், இந்த கோவில் சிதிலம் அடைந்து தற்பொழுது ஏழாவது முறை கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் வள்ளி மற்றும் தேவயானி ஆகிய இருவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. தைப்பூசத்தின் பொழுது நடைபெறும் தெப்பத் திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படும்.

 

இக்கோவிலில், திருமணம் மற்றும் காது குத்தல் நடைபெற்றால் கடவுள் அருள் நேரடியாக கிடைக்கும் என நம்பப்படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆடி கிருத்திகை அன்று, முருக பெருமானே தரிசித்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது .சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு பேருந்து வசதிகள் எளிதில் கிடைக்கின்றன. வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒரு நாள் சென்று வாருங்களேன்.

 



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண