தஞ்சாவூர்: சிவராத்திரி விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் திலகர் திடலில் கலைநிகழ்ச்சிகளுக்காக மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்து சிவன் கோவில்களிலும் சிவராத்திரி விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும், அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும்.


அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி. இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். பகவான் விஷ்ணுவின் கையில் உள்ள சக்ராயுததிற்கு எவ்வளவு சக்தி உண்டு என்பது நாம் அறிந்ததே. சிவனை நோக்கி சிவராத்திரி அன்று பகவான் விஷ்ணு கடும் தவம் இருந்து அதன் பலனாக அந்த சக்ராயுதத்தை பெற்றார் என்று கூறப்படுகிறது. பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடி முடியை தேடி செல்கையில் சிவபெருமான் நெருப்பு பிழம்பாய் விஸ்வரூபம் எடுத்து நின்றதும் மகா சிவராத்திரி அன்று தான் என்று கூறப்படுகிறது.

ஊழிக்காலத்தால் உலகம் அழிந்துவிட, மீண்டும் இந்த உலகம் இயங்க வேண்டும் என்ற நல் எண்ணம் கொண்ட அன்னை பரமேஸ்வரி, சிவபெருமானை நோக்கி கடும் விரதம் இருந்து அவர் உடலில் சரிபாதியை பெற்றது மகா சிவராத்திரி அன்று தான் என்று புராணம் கூறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற மகா சிவராத்திரியை ஒட்டி உலக புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் நாளை மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


இதுகுறித்து தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா கூறியதாவது: சிவராத்திரி விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள திலகர் கடலில் மேடை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு 2000 முதல் 3000 பேர் அமர்வதற்கான இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விழாவுக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக சிவகங்கை பூங்கா அருகிலும் மற்றும் கோவில் எதிரே உள்ள வாகனம் இருக்கும் இடத்தில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

அதேபோல் மேடை அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஆன்மீக புத்தகம், பிரசாதங்கள், உணவு மற்றும் தின்பண்டங்கள் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் தேவைக்கு ஏற்ப தற்காலிக கழிவறைகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 6 மணி வரை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.