முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் 12 ஆண்டுகள் கழித்து மகா கும்பாபிஷேகம் நடக்கவேண்டும். ஆனால் பெருந்திட்ட வளாக பணிகள் மற்றும் திருப்பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் துவங்கி நடந்து வருகிறது. அதோடு  அறநிலையத்துறையும் பணிகளையும் சேர்த்து மகா கும்பாபிஷேக திருப்பணிகளும் நடக்க உள்ளன. இதன் ஒரு பகுதியாக கோயில் கிழக்கு கோபுரம் மற்றும் சாலக்கோபுரம்(சண்முக‌ விலாச மண்டப நுழைவு வாயில்) திருப்பணிக்கான பாலாலயம் பந்தல்கால் நடும் விழா நடந்தது. 




இதனையொட்டி அதிகாலை காலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம். அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 8:00 மணிக்கு கோயில் உட்புறம் உள்ள யாகசாலை மண்டபத்தில் பாலாலய பூஜைக்கான யாக பூஜைகள் சிவாச்சாரியார்கள் தலைமையில் துவங்கியது. தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கும்பங்களை சிவாச்சாரியார்கள் விமான தளத்திற்கு எடுத்து வந்தனர். அங்கு கிழக்கு கோபுரம் மற்றும் சாலக்கோபுரத்திற்கான திருப்பணிக்கான கும்பங்கள் வைக்கப்பட்டு ஆவாகனம் செய்யப்பட்டது.




தொடர்ந்து கிழக்கு கோபுரம் அருகில் பந்தல்கால் நடப்பட்டது. பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் யாகசாலை மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டு ஹோம பூஜை நடந்தது. தொடர்ந்து அங்கு மரத்தினால் ஆன கோபுரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பூர்ணாகுதி நடந்தது. பின்னர் ஆவாகனம் செய்யப்பட்ட கும்பத்திலிருந்த புனித நீரால். மரத்தால் செய்யப்பட்ட கோபுரத்திற்கு சிவச்சாரியாளால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. 




இந்நிகழ்ச்சியில் சென்னை இணை ஆணையர் செந்தில் வேலன். கோயில் இணை ஆணையர் கார்த்திக். அறங்காவலர் கணேசன்.  ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ஸ்ரீமதிசிவசங்கரன், கோயில் சூப்பிரண்ட் ராஜேந்திரன், தூத்துக்குடி உதவி ஆணையர் வெங்கடேஷ், பேஸ்கார் ரமேஷ், வேல் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.