உலக அதிசயங்கள் ஏழு. ஆனால் தஞ்சையில் ஒரே கோயிலில் ஒன்பது அதிசயங்கள் உள்ளன. அட நம்புங்க. உண்மையிலும் உண்மைதாங்க. அந்த கோயில் எது என்றும்... அந்த 9 அதிசயங்கள் பார்ப்போம் வாங்க.
பிரளயத்தின் முடிவில் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்ற வேண்டும். அப்படிதான் பூமியெங்கும் மழை கொட்டத்தீர்த்தது. உயிரினங்கள் அழிய திரும்பிய திசையெல்லாம் வெள்ளம். ஆனால் பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது அதுதான் தென்குடித் திட்டை என்கிற திட்டை.
பெரு வெள்ளத்திலும் மூழ்காத திட்டை தலம் ஒரு அதிசயத்திலும் அதிசயம்தான். இந்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில்தான் இந்த அதிசயங்கள் அடங்கி உள்ளது. இங்கு இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளியுள்ளார். அம்மன் சன்னதிக்கு மேலே மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக் கட்டங்கள் மேற்கூரையில் செதுக்கப்பட்டுள்ளன. தங்கள் ராசியின் கீழ் நின்று அந்தந்த ராசிக்காரர்கள் அம்மனை வழிபடும்போது அம்மன் தோஷம் நீங்க அருள் பாலிப்பார். திருமணத்தடை, மாங்கல்ய தோஷம் நீங்க அருள்புரிவதால் மங்களாம்பிகை எனப் புகழப்படும் உலகநாயகி இரண்டாவது அதிசயம்.
மும்மூர்த்திகளும் வழிபட்டு வரம் பெற்றது இங்குதான் என்பது மூன்றாவது அதிசயம். மூலவர் வசிஷ்டேசுவரர் விமானத்தில் சந்திரக்காந்தக்கல், சூரியக்காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இறைவனுக்கு மேலே உள்ள சந்திரக்காந்தக்கல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்யப்படுகிறது. 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இப்போதும் உண்டு. எந்த ஒரு சிவன் கோவிலிலும் காண முடியாத அற்புதம் இது. இது நான்காவது அதிசயம். ஆஹா என்கிறீர்களா. இருங்க. இன்னும் 5 அதிசயங்கள் என்னவென்று பாருங்கள்.
கோயிலின் நான்கு மூலைகளிலும் 4 லிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஐந்தாவது லிங்கமாக வசிஷ்டர் பூஜித்த வசிஷ்டேசுவரர் உள்ளார். இதனால் இத்தலம் பஞ்சலிங்க தலமாக உள்ளது. பஞ்சபூதங்களுக்கும் தனித்தனியே தலங்கள் உண்டு. ஆனால், ஒரே கோவிலில் பஞ்ச பூதங்களுக்கும் 5 லிங்கங்கள் அமைத்திருப்பது 5வது அதிசயம்.
திட்டை தலத்தில் சிவன், உமை, விநாயகர், முருகன், குரு, பைரவர் ஆகிய ஆறுபேரும் தனித்தனியே அற்புதங்கள் நிகழ்த்தி தனித்தனியாக வழிபடப்பட்டு தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். பரிவார தேவதைகளைப் போல அல்லாமல் மூலவர்களைப் போலவே அருள்பாலிப்பது இக்கோயிலில் அமைந்துள்ள ஆறாவது அதிசயம்.
சில கோயில்கள் கருங்கல், சில கோயில்கள் செங்கல் ஆகியவற்றால் கட்டப்பட்டு இருக்கும். ஆனால் கொடி மரம், விமானங்கள், கலசங்கள் ஆகிய அனைத்தும் கருங்கற்களினால் உருவாக்கப்பட்டிருப்பது இக்கோயிலில் மட்டுமே. இது ஏழாவது அதிசயம்.
பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்கும் சென்று தோஷம் நீங்கப் பெறாததால் இக்கோயிலுக்கு வந்து இத்தல இறைவனை ஒரு மாதம் வரை வழிபட்டார். இறைவனும் அவர் முன் தோன்றி உன் தோஷம் முடிந்துவிட்டது. நீ திட்டைத் திருத்தலத்தின் கால பைரவனாக எழுந்தருளி உன்னை வழிபடுவோருக்கு அருள் செய்வாய் என அருள்பாலித்தார். அப்போது முதல் இந்தத் தலம் பைரவ ஷேத்திரமாக விளங்கி வருகிறது. இங்கு எழுந்தருளியுள்ள பைரவர் எட்டாவது அதிசயம்.
இந்தக் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையே எங்கும் இல்லாத சிறப்போடு நின்ற நிலையில் குருபகவான் “ராஜகுரு”வாக அருள்பாலித்து வருகிறார். இது ஒன்பதாவது அதிசயம்.
உலக அதிசயங்கள் 7 தான்... ஆனால் தஞ்சையில் ஒரே கோயிலில் ஒன்பது அதிசயங்கள்..!
என்.நாகராஜன்
Updated at:
28 Nov 2022 01:56 PM (IST)
தஞ்சாவூரில் அமைந்துள்ள ஒரு கோவிலில் இடம்பெற்றுள்ள அதிசயங்களை பற்றி தெரிஞ்சிக்கோங்க..
தஞ்சை திட்டை கோயில்
NEXT
PREV
Published at:
28 Nov 2022 01:56 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -