சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சுமார் 1.7 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 


சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டதால் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. நாளுக்கு நாள் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  


சபரிமலை ஐயப்பன்கோவிலில் நடப்பாண்டிற்கான மண்டல பூஜைக்கான நடை நவம்பர் 16ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது.  சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி முதல் தொடர்ந்து 41 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 27-ந் தேதி மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது. இதன் பிறகு நடை மூடப்படும்.


நடை திறப்பு:


நவம்பர் 16 -ஆம் தேதி  மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை, அத்துடன் மண்டலப் பூஜைகள் முடிவடைந்து டிசம்பர் 27 -ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.


பின்பு மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலின் நடை டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதில் உலகப் புகழ்ப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறும். இதற்கு அடுத்து மகர விளக்கு பூஜை நிறைவடைந்து ஜனவரி 20ம் தேதி கோயிலின் நடை சாத்தப்படும். இந்நிலையில் கேரள மாநிலத்தின் விஷு வருட பிறப்புக்கு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை திறக்கப்படும். 


மகரவிளக்கு பூஜைக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் சபரிமலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான sabarimalaonline.org எனும் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.  சபரிமலையில் தரிசனம் செய்ய குழந்தைகளுக்கு முன்பதிவு செய்யத் தேவையில்லை. முன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் எனப்படும் சபரிமலை செல்லும் பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 இடங்களில் பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பதிவு செய்த பிறகு, ஐயப்ப தரிசனம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.  


கேரள மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவது வழக்கம். சபரி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும், கொரோனா பரவல் மற்றும கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர் கூட்டம் அதிகரிப்பால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்த நடை, தற்போது 3 மணிக்கே திறக்கப்படுகிறது. அதேபோல் மாலையிலும் நடை திறப்பு 4 மணியில் இருந்து 3 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.


வார நாட்கள் ஒப்பிடும் போது வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் அதிக அளவு கூட்டம் காணப்பட்டது. நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) சபரிமலையில் தரிசனத்திற்காக 87,491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அதில் 85,000 பேர் ஒரே நாளில் இரவு வரை காத்திருந்து தரிசனம் செயதனர். இதேபோல் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக அலைமோதியது. ஆன்லைன் மூலம் 63,130 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இவர்கள் தவிர வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினர். அதன்படி நேற்று ஒரே நாளில் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு மூலம் மொத்தம் 90,000 தரிசனம் செய்தனர். கடந்த 2 நாட்களில் 1,75,000 பேர் தரிசனம் செய்துள்ளனர் என கூறப்படுகிறது.