நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணமலையார் திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்தை தொடர்ந்து காலை 10 மணி அளவில் ராஜகோபுரத்தின் முன்பு உள்ள 16 கால் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அதன்பின் வெள்ளி விமானத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், கண்ணாடி விமானங்களில் விநாயகர், பராசக்தி அம்மன், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்பகுதியில் உள்ள பக்தர்கள் தங்கள் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். முதல் நாளான இரவு உற்சவத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஷ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு அண்ணாமலையார் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.





 


அதனை தொடர்ந்து திருக்கோவில் இராஜ கோபுரம் முன்பு உள்ள 16 கால் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் , வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், ஹம்சம் வாகனத்தில் பராசக்தி அம்மன், அதிகார நந்தி வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் வாகனங்களில், ஒன்றன்பின் ஒன்றாக திருக்கோயிலின் நான்கு மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அப்போது துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் வெவ்வேறு வாகனங்களில் நடக்கிறது.


 




இரண்டாம் நாளான இன்று (28நவ) காலையில் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள திருக்கல்யாண திருமண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னர் அண்ணாமலையார் கோவிலின் முன்பு உள்ள ஆயிரம்கால் மண்டபம் முன்பு அலங்கரிக்கப்பட்ட தங்கை சூரியபிரபை வாகனத்தில் மாடவீதியில் ஒன்றன் பின் ஒருவராக வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இரவு 8 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள திருக்கல்யாண திருமண மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு, அதன் பின்னர் ஆயிரம் கால் மண்டபம் முன்பு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகளும் மாடவீதியில் விதியில் ஒன்றன் பின் ஒன்றாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.