தஞ்சாவூர்: அனைவரையும் வாழ வைக்கும் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் ஆடிப் பெருக்கை உற்சாக கொண்டாடி மகிழ்ந்தனர். மாலை வரை நீர் நிலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதும் குறிப்பிடத்தக்கது. இதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆடி 18ம் நாள் விழா அதாவது ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் நீர் நிலைகளில் ஆடிபெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆடிப்பெருக்கு விழாவை எதற்காக கடைப்பிடித்து வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாகச் புராணங்கள் வாயிலாக அறியமுடிகிறது. இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. ஆடிப்பிறப்பு, சர்வ நதி ரஜஸ்வலா, ஆடிப்பதினெட்டில் ஆடி பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல் இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆடிமாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.

தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர்.  

தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகமாகிப் பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பிக் காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியைப் பெண்ணாக - தாயாகப் பாவித்து வணங்கிப் போற்றும் ஆடிப் பெருக்கு எனும் மங்கள விழா தொன்று தொட்டு நிகழ்த்தப்படும் விழாவாகும். அனைவரையும் வாழ வைக்கும் அந்தக் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவே, "ஆடி பதினெட்டாம் விழா' கொண்டாடப்படுகிறது.

அதன்படி தஞ்சையில் பெருக்கெடுத்து ஓடும் கல்லணை கால்வாய், வெண்ணாறு, வடவாறு, வெட்டாறு, காவிரி ஆறு, குடமுருட்டி உள்ளிட்ட படித்துறைகளில் புதுமண தம்பதிகள் தங்களது மாங்கல்யத்தை கோர்த்து புதிதாக அணிந்து கொண்டனர். இதேபோல் புகழ்பெற்ற திருவையாறு காவிரி புஷ்ய மண்டபதுறையில் காவிரியின் இருகரைகளிலும் திரண்ட பொதுமக்கள் பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைத்து, காவிரித்தாயை வழிபடுவார்கள். மேலும், ஆடி மாதத்தில் பிரிந்திருந்த புதுமண ஜோடிகள், காவிரி கரைக்கு வந்து தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலையை ஆற்றில் விட்டனர்.

கணவருக்கு நீண்ட ஆயுளும், நீடித்த செல்வமும் வழங்க வேண்டும் என்று சுமங்கலி பெண்கள் அனைவரும் காவிரித்தாயை பிரார்த்தித்து, தங்களது தாலியை பிரித்து புதுத்தாலியை கட்டுவார்கள். இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தற்போது அனைத்து நீர் நிலைகளிலும் அதிகமான அளவில் தண்ணீர் சென்று வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் தண்ணீரில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் 850 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை வரை மக்கள் கூட்டம் நீர் நிலை பகுதிகளில் அலை மோதியது.

ஆடி மாதம் இந்து மதத்தில் புனித மாதமாக கருதப்படுகிறது. அதுவும் இந்த மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு நாளில், நீர் நிலைகளை போற்றி வழிபடுவதும், சுப காரியங்களை தொடங்குவதும் நல்லதாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளில் மக்கள் அதிகளவில் பூக்களை பயன்படுத்துவதால், அதன் தேவை அதிகரிக்கிறது. இதனால், பூக்களின் விலை வழக்கத்தை விட கணிசமாக உயர்ந்து விற்பனையானது..

அதன்படி, தஞ்சை பூக்கார தெரு மற்றும் தொல்காப்பியர் சதுக்கத்தில் உள்ள பூச்சந்தையில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. மல்லிகைப்பூ - ரூ.1000-க்கும், முல்லைப்பூ - ரூ.1000-க்கும், செவ்வந்தி - ரூ.600-க்கும், ஆப்பிள் ரோஸ் - ரூ.400-க்கும், செண்டுப்பூ - ரூ.200-க்கும், சந்தன முல்லை - ரூ.1500-க்கும் விற்பனையானது.

இதேபோல், பன்னீர் ரோஸ் - ரூ.400-க்கும், கனகாம்பரம் - ரூ.2000-க்கும், கோழிக்கொண்டை - ரூ.150-க்கும், சம்பங்கி -ரூ.500-க்கும், நந்நியாவட்டை - ரூ.250-க்கும், தாமரை - ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஸ்பெஷல் அரளி - ரூ.400-க்கும், மாசிப்பச்சை - ரூ.40-க்கும், ஜாதிப்பூ - ரூ.1000-க்கும் விற்பனையாகிறது. விலை அதிகரித்தாலும் பூக்களின் தேவை இருப்பதால் மக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.