தமிழ் மாதமான ஆடி மாதம் 18-ஆம் நாள், விவசாயத்தின் செழிப்பிற்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதாரமாய் விளங்கும் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் விவசாயத்தை செழிக்க செய்யும் காவிரிக்கு தங்கள் நன்றியினை தெரிவிக்கும் வகையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர். அதேபோன்று மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற காவிரி துலாக்கட்டத்தில், இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப் பெருக்கு விழா
மயிலாடுதுறையின் தொன்மையையும், ஆன்மிக சிறப்பையும் பறைசாற்றும் துலாக்கட்ட காவிரி படித்துறையில், அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. பெண்கள், புதுமணத் தம்பதியர் என ஏராளமானோர் காவிரி அன்னையை வரவேற்று, ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.
காவிரி படித்துறையில் வாழை இலை விரித்து, அதில் காமாட்சி விளக்கு, கண்ணாடி, வளையல், கருகமணி, தேங்காய், பழங்கள், மாவிளக்கு, காப்பரிசி ஆகிய மங்கலப் பொருட்களை வைத்து, காவிரி தாய்க்கு படையல் இட்டு வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டில் கலந்துகொண்ட திருமணமான பெண்கள் தங்களது மாங்கல்ய பலம் அதிகரிக்க வேண்டும் என்றும், திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் பெண்கள் விரைவில் திருமணம் கைகூட வேண்டும் என்றும் காவிரி அன்னையிடம் வேண்டிக்கொண்டனர்.
புதுமணத் தம்பதியரின் பாரம்பரிய சடங்கு
ஆடிப்பெருக்கு விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று, புதுமணத் தம்பதியர் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு. அன்றைய தினம் புதுமணத் தம்பதியர் தங்களது பழைய தாலியை புதிய தாலியில் கோர்த்து அணிந்து கொள்வது வழக்கம். இந்தச் சடங்கு, தம்பதியரின் திருமண பந்தத்தை மேலும் பலப்படுத்தி, நீண்ட நாட்களுக்கு நீடிக்கச் செய்யும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவிலும், பல புதுமணத் தம்பதியர் காவிரி துலாக்கட்டத்திற்கு வந்து, தங்கள் தாலிகளை பிரித்து, புது தாலியில் கோர்த்து அணிந்துகொண்டு காவிரி அன்னையின் அருளைப் பெற்றனர்.
காவிரித்தாய்க்கு சிறப்பு பூஜைகள்
மயிலாடுதுறை துலாக்கட்டத்தின் தென்கரையில் அமைந்துள்ள காவிரித்தாய் சிலைக்கு, ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேள தாளங்கள் முழங்க, காவிரித்தாய் சிலைக்கு சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. பின்னர், சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. காவிரித்தாயின் இந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் காவிரி செல்லும் வழி எங்கும் மக்கள் ஆடிப்பெருக்கு வழிப்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
பூம்புகார் வரை நீடித்த ஆடிப்பெருக்கு விழா
காவிரி துலாக்கட்டத்தில் மட்டுமல்லாமல், குடகு மலையில் உருவாகும் காவிரி கடைசியாக கடலில் சங்கமிக்கும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடற்கரையிலும் ஆடிப்பெருக்கு விழா களைகட்டியது. காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதியான பூம்புகாரில், மக்கள் திரண்டு ஆடிப் பெருக்கு விழாவை கொண்டாடினர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை காவல்துறையினர் பாதுகாப்புப் பணியிலும், நகராட்சி ஊழியர்கள் தூய்மைப் பணியிலும் ஈடுபட்டனர். காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் இந்த ஆடிப்பெருக்கு விழா, மக்களின் நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்தது. இது, வருங்கால சந்ததியினருக்கும், காவிரி ஆற்றின் முக்கியத்துவத்தையும், அதன் மகத்துவத்தையும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த விழாவாக திகழ்கிறது.