தஞ்சாவூர்: இனம், மதம், ஜாதி என்று தினமும் பல இடங்களில் பலவாறு செய்திகளை கேட்டு கேட்டு சலித்து போன இதயங்களை குளிர்வித்துள்ளது தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசிமக திருவிழா. ஆமாம். இது இந்துக்களின் முக்கியமான விழாவாக இருந்தாலும் மத ஒற்றுமை இங்கு மேலாங்கியது காரணம். மகாமக குளத்தில் நடந்த தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். அப்போது பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர். இதுதானே உண்மையான மத நல்லிணக்கம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், மாசிமக திருவிழா பத்துநாள் உற்சவத்தை முன்னிட்டு, கடந்த பிப்.9ம் தேதி ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட ஆறு சிவாலயங்களில் கொடியேற்றப்பட்டு, விழாவின் 5ம் நாள் ஓலைச்சப்பரமும், 9ம் நாள் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும் நடந்தது.  

மேலும், பாணபுரிஸ்வரர், கம்பட்டவிஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர் ஆகிய ஆறு சிவாலயங்களில், ஏகதினம் உற்சவமாக நேற்று கொண்டாடப்பட்டது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரியை முன்னிட்டு, 12 சிவாலயங்களில் இருந்து, சுவாமி,அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் புறப்பட்டு,  மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர்.




பின்னர், அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிறகு அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடிய போது, குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இங்கு உள்ளமும், மனமும் நிறையும் வகையில் ஒரு நிகழ்வு நடந்தது.

மகாமக குளத்தில் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கினர். மாசிமகத்தில் கலந்துக்கொண்ட பக்தர்களுக்கு, பல்வேறு அமைப்பினர் அன்னதானம் வழங்கினர். அதன்படி, மகாமக குளம் அருகே காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு வீதியில், கும்பகோணத்தை சேர்ந்த இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில், மகத்திற்கு வந்த பக்தர்களுக்கு எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர் சாதம், குடிதண்ணீர் பாட்டில்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.இதில், அமைப்பின் தலைவர் ஜாஹிர் உசேன், இணைச் செயலாளர் அசாருதீன், துணை செயலாளர் பசீர் அகமது உள்ளிட்டார் கலந்துக்கொண்டனர்.





கடந்த 23 ஆண்டுகளாக, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, கோவில் திருவிழாக்கள், தேரோட்டம் என அனைத்து விழாக்களிலும் அன்னதானம், மோர் பந்தல் என செய்து வருவதாகவும், ரம்ஜான் பண்டிக்கை நோன்பின் போது அனைத்து மதத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஒற்றுமை ஓங்கி ஒலிக்கும். நாளைய வரலாற்றில் இந்த மதநல்லிணக்கம் வானுயர்ந்து நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடவுள் பெயரை சொல்லி பிரிவினை உருவாக்குபவர்கள் மத்தியில் இதுவல்லவோ ஒற்றுமை, மத நல்லிணக்கம் என்று பார்ப்பவர்கள் அனைவரும் பாராட்டிச் சென்றனர்.