தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் முத்துப்பந்தல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிரமாண்டமான முத்துப்பல்லக்கு விழா நடந்தது.
கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், சோழ மன்னர்களின் காவல் தெய்வமான துர்கை வடக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு எட்டு கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாகவும்,
லட்சுமி துர்க்கையாகவும் அருள்பாலிக்கிறார் காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்ற புகழ் பெற்ற தலம் ஆகும். இக்கோயிலில் முத்துப்பந்தல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிரமாண்டமான முத்துப்பல்லக்கு விழா நடந்தது.
இதில் விசேஷ மலர் அலங்காரத்தில் திருஞானசம்மந்தர் எழுந்தருளினார். இந்த வைபவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருஞானசம்பந்தரை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் முதல் தேதியில் புராண வரலாற்றுப்படி திருஞான சம்பந்தர் தன்னை தரிசிக்க கொடிய வெயிலில் வருவது தேனுபுரீஸ்வரருக்கு பொறுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது பூத கணங்களை அனுப்பி, திருஞான சம்பந்தரை வெயில் அவர் மேலே படாவண்ணம் முத்துப்பந்தல் அமைத்து, அதன் கீழ் அழைத்து வர கட்டளையிட்டதுடன், அவ்வாறு அவர் வரும் அழகை, தான் காண வேண்டும் என்பதற்காக தன் எதிரில் உள்ள நந்தியம் பெருமானை சற்று விலகி இருக்குமாறும் கட்டளையிட்டதாக ஐதீகம்.
இதனால் இந்த கோயிலில் நந்தியம்பெருமான், தேனுபுரீஸ்வரர் நேரே இல்லாமல் சற்று விலகியே இருப்பதை இன்றும் காணலாம். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் முதல் நாள் இவ்விழா நடைபெறும்.
அதேபோல், ஆனி மாத முதல் நாளான நேற்று, இவ்விழாவை முன்னிட்டு திருஞானசம்பந்தர், பட்டீஸ்வரம் திருமடாலயத்தில் இருந்து திருமேற்றழிகை அருள்மிகு கைலாசநாத சுவாமி கோயிலுக்கு அழகிய முத்துப்பல்லக்கில் எழுந்தருளினார்.
பின்னர் அங்கிருந்து திருசக்தி முற்றம் சக்திவனேஸ்வர சுவாமி கோயிலுக்கு வந்த பின் அழகிய முத்துப்பந்தலில் அடியார்கள் புடை சூழ தேனுபுரீஸ்வர சுவாமியை தரிசிக்க செல்லும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 24 அடி உயரமும், 36 அடி நீளமும் மற்றும் 3 டன் எடையும் கொண்ட அழகிய முத்துப்பல்லக்கினை நந்தி வாத்தியங்கள் முழங்க, இருபுறமும் 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.