தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி மானோஜிப்பட்டி பொதிகை நகரில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சமத்துவப் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


மிகவும் எளிமையான பிள்ளையார் வழிபாடு


பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச்  செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப்பொருட்களுக்குள் பெரும்  தத்துவம் அடங்கிக் கிடக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்து படைத்தால் வாழ்க்கையே வளமாகும். 
 
மோதகம், இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது. அவல், பொரிஆகியவை ஊதினாலே பறக்கக்கூடிய இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம்சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


நினைத்த காரியங்கள் கைகூடும்


விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள்  நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும்.




மானோஜிப்பட்டி பொதிகை நகர் மக்களின் சமத்துவ பொங்கல்


விநாயகர் சதுர்த்திநாளில் வழிபாட்டிற்கு மண்ணால் அமைத்த விநாயகரையே வழிபாடு செய்ய வேண்டும். பூஜித்த பின் இவ்விநாயகரை ஆறு, குளம், ஏரிகளில் கரைத்துவிடலாம். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம். இத்தகைய சிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த மானோஜிப்பட்டி பொதிகை நகர் பொதுமக்கள் ஆண்டுதோறும் சமத்துவப் பொங்கல் விழாவை நடத்தி வருகின்றனர்.


உள்ளத்தில் உவகை பொங்கிடும் வேளையில் ஏழைப் பாட்டாளி மக்களின் இதயம் குளிர்ந்திடும் வகையில்  தொழிலாளர் சமுதாய தோழர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை நடத்துகின்றனர்.  அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இந்த சமத்துவ பொங்கல் விழாவை மானோஜிப்பட்டி பொதிகை நகர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.


8ம் ஆண்டாக நடந்த இந்த சமத்துவப் பொங்கலை 38 பெண்கள் செய்தனர். பொங்கலுக்கு தேவையான வெல்லம், அரிசி, ஏலக்காய், பருப்பு மற்றும் பொருட்கள் வைத்துக் கொள்ள ஒரு பாத்திரம் என்று 38 பெண்களுக்கும் ராமநாதபுரம் ஊராட்சித் தலைவர் குழந்தையம்மாள் ரவிச்சந்திரன் வழங்கி விழாவை தொடக்கி வைத்தார்.


சமத்துவமான பொங்கல் விழாவில் மிகுந்து நிற்கும் சகோதரத்துவம்


தொடர்ந்து கோலமிட்ட அடுப்புகளில் பெண்கள் பொங்கல் பானையை வைத்து பொங்கலிட்டனர். விழாவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் பேசுகையில், அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி அனைவரும் சமம் என்பதை உணர்த்தி வருகிறோம். இதுபோன்று நடக்கும் சமத்துவமான பொங்கல் விழாவில் சகோதரத்துவம் மிகுந்து காணப்படும். அதுபோன்று இங்கு நடக்கும் இந்த சமத்துவப் பொங்கல் விழாவும் உள்ளது என்றார்.


தொடர்ந்து பொங்கல் வைத்து நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் பொங்கல் வழங்கி மகிழ்ந்தனர். ஏற்பாடுகளை வார்டு உறுப்பினர் சத்யா ராமலிங்கம், இளைஞர் மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.