சஷ்டி திருநாளில் விரதம் இருந்து வழிபடுவோர்க்கு உரிய காலத்தில் திருமணம் நடந்து, குழந்தைப்பேறும் பெற்று இன்புற தஞ்சை மாவட்டம் ஏரகரம் கந்தநாசு சுவாமி கோயிலுக்கு வாருங்கள்.



முருகனின் அறுபடை ஸ்தலங்களில் நான்காவது ஸ்தலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை ஆகும். இதற்கு அருகில் உள்ள ஏரகரம் என்ற ஊரில் மிகப் பழமையான கந்தநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. கும்பகோணம்-சுவாமிமலை சாலையில், மூப்பக்கோயிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.

கும்பகோணம் - நீலத்தநல்லூர் சாலையில் உள்ள அசூரில் இருந்தும் இவ்வூருக்குச் செல்லலாம். இக்கோயிலில் விக்ரமச்சோழன் (1120 - 1136) காலத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. `இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்முடி சோழ மங்கலம்’ என்று அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

`இன்னம்பர் நாடு’ என்பது பழங்காலத்தில் சோழமண்டலத்தில் காவிரிக்கு வடகரையில் இருந்த பற்பல நாடுகளில் ஒன்றாகும். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசு சுவாமிகள் தமது (திருப்புகலூர்) க்ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் `இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர்... கயிலாயநாதனையே காணலாமே' என்று பாடியுள்ளார்.

இப்பாடலில் குறிக்கப்படும் ‘ஏர்’ என்ற ஊர், இன்னம்பரோடு சேர்த்துப் பாடப் பெற்றிருக்கிறது. இவற்றின் மூலம் இத்தலத்தின் தொன்மையை மட்டுமன்றி, இது தேவார வைப்புத் தலமாக உள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

சுவாமிமலை கோயிலைவிட ஏரகம் கோயில் தேவாரத்திலும் கல்வெட்டிலும் குறிப்பிடப் பெறுவதால், அது காலத்தினால் முற்பட்டது என்பதை உணரலாம். கந்தப் பெருமான் சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றமையால் ஏரகத்திலுள்ள இறைவன் பெயர் ஸ்கந்த நாதர் என வழங்கலாயிற்று. இவருக்கு சங்கரநாதர் என்றும் பெயர் உண்டு. மேலும் குமரன் அமர்ந்த இடமாதலால் இத்தலத்தைக் குமாரபுரம் எனவும் அழைப்பர்.

இந்தத் தலத்தில் அம்பிகைக்கு `சங்கரநாயகி’ என்று பெயர். கோயிலுக்கு அருகிலுள்ள சரவணப் பொய்கை கந்தப் பெருமானால் உண்டாக்கப்பெற்றது. இங்கே முருகன் சிவபெருமானைப் பூசித்து சூரசம்ஹாரத்திற்குப் பல அஸ்திரங்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.





இக்கோயில் நான்கு பிராகாரங்களுடன், நெல்லி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டும் அமைந்திருக்கிறது. கோயிலில் நுழைந்தவுடன் துவார விநாயகர், துவார சுப்ரமணியர் சந்நிதிகள் உள்ளன. கொடிமரம் இல்லை. அம்பிகை சங்கர நாயகி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். வெளிச்சுற்றில் விநாயகர், முருகன், நவகிரகங்கள் முதலான சந்நிதிகள் உள்ளன.

கந்தநாத சுவாமி, சிவலிங்க வடிவில் ஜெகஜோதியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மேற்குப் பிராகாரத்தில் ஏரகத்தமர்ந்த எழில் முருகன், ஒரு முகம் நான்கு கரங்கள் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். பின் கரங்களில் வஜ்ர சக்தியும் திரிசூலமும் கொண்டுள்ளார். முன் வலக்கரத்தால் அபயம் காட்டியும் இடக் கரத்தை இடுப்பில் ஊன்றியபடியும் அருள்பாலிக்கிறார்.

அற்புதமான இந்தக் கோலத்தை ஆதிசுவாமிநாத சுவாமி’ என்று போற்றுகின்றனர். இக்கோயிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் சங்கரியம்மையிடம் சக்திவேல் பெற்று சூரசம்ஹாரத்திற்கு செல்லும் வைபவம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பெருமானை சஷ்டி திருநாளில் விரதம் இருந்து வழிபடுவோர்க்கு உரிய காலத்தில் திருமணம் நடந்து, குழந்தைப்பேறும் பெற்று இன்புறுவர் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.