தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ளது அதிராம்பட்டினம். இங்கு பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றி அவர்களுக்கு அபயம் அளித்து வருகிறார் அபயவரதீஸ்வரர். இங்குள்ள இறைவி சுந்தரநாயகி. தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.



ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. முன்னொரு காலத்தில், அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அவர் அபயம் தந்து காப்பாற்றுவார். அந்த மண்டலம்தான் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ள அபயவரதீஸ்வரர் கோயில் ஆகும்.

அபயம் தந்து காப்பாற்றுவார் என்பதால்தான் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாக பக்தர்கள் நம்பிக்கை. ரைவதம் என்பது சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார்.

இந்த முனிவர்கள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா! என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த நட்சத்திர பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள் செய்துள்ளார்.

அவரது பெயரால், அதிவீரராமன்பட்டினம் என்று அழைக்கப்பட்டு தற்போது அதிராம்பட்டினமாக மாறிவிட்டது என்கின்றனர். இத்தல அம்மன் சுந்தரநாயகி கடலை நோக்கி அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் இவருக்கு உண்டு. இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும். பட்டுக்கோட்டையிலிருந்து தென்கிழக்கே 13 கி.மீ தொலைவில் அதிராம்பட்டினம் அமைந்துள்ளது.

மூன்று நிலை ராஜ கோபுரத்தைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தல மரம் வன்னி மரம் ஆகும். பங்குனி உத்திரம் இத்தலத்தின் முக்கிய திருவிழா ஆகும். மேலும் திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, ஆருத்ரா அபிஷேகம் போன்றவை சிறப்பாக நடந்து வருகிறது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய சிறந்த தலம் இது. திரிநேத்ர சக்தி கொண்ட தலம்.