தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜாதி சமய பேதமின்றி அனைத்து இடங்களிலும் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் ஆலயத்தில் பொங்கல் வைத்து பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. சவேரியார் ஆலய வளாகத்தில் கரும்புகள் கட்டி, பொங்கல் வைத்து, பொங்கலோ பொங்கல் அன்பிய பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பினர்.
தொடர்ந்து, பானையில் பொங்கலை நிரப்பி ஆலய முகப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபாட்டு பீடத்தில் வைக்கப்பட்டது. பின்னர் ஆலய பங்குத்தந்தை பேரருட் திரு தார்சிஸ்ராஜ் மற்றும் உதவி பங்கு தந்தை மைக்கேல் டைசன் ஆகியோர் பங்கேற்று பொங்கல் சிறப்பு திருப்பலியில் ஈடுபட்டனர். கிறிஸ்துவ இசை பாடல்கள் பாடி, புனித நீர் ஜெபித்து அதை வழிபாட்டில் பங்கேற்றவர்கள் மேல் தெளித்து ஆசி வழங்கப்பட்டது.
ஏராளமான கிறிஸ்தவ பங்கு மக்கள் பொங்கல் நிகழ்ச்சி பிரார்த்தனையில் பங்கேற்று வழிபாடு செய்தனர். சிறப்பு திருப்பலியை செய்து வைத்த ஆலய பங்குத்தந்தை, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பொதுமக்களுக்கு நல்ல நன்மைகளை செய்ய வேண்டும் என்று ஆண்டவனிடம் பிரார்த்திப்பதாக ஜெபித்துக் கொண்டார்.
தை மாத பிறப்பை ஒட்டி மயிலாடுதுறையில் கிராமக் கோயிலான பொன்னம்மா காளியம்மன் கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியில் பழமைவாய்ந்த கிராம கோயிலான பொன்னம்மா காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாத பிறப்பன்று, பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அவ்வகையில் நிகழாண்டு உற்சவத்தை ஒட்டி இன்று மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், நாக்கில் 16 அடி அலகு குத்தி காவடி எடுத்தும் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு தங்கள் கொண்டு வந்த பால் அபிஷேகம்் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தைத் திருநாளான பொங்கலையொட்டி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் பாரம்பரிய முறையில் புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாக கொண்டாட்டம்; புதுமணத் தம்பதியினர் பொங்கள் பொங்கி குடும்பத்தினருடன் தல பொங்கலை கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. விளைநிலங்களில் விளைந்த புத்தரிசி, காய்கறிகளை சூரியபகவானுக்கு படைத்து வீட்டின் முன்பு வண்ண வண்ண கோலமிட்டு தை முதல் நாளில் பொங்கலிடுவது வழக்கம். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக தரங்கம்பாடி தாலுக்கா கனிவாசல் கிராமத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு பொங்கல் பானை கரும்பு வரைந்தும், வண்ண, வண்ண கோலமிட்டடனர். பராம்பரிய உடையான வேட்டி சட்டை புடவை கட்டி புத்தாடை அணிந்திருந்தனர். பூ, பழங்கள், காய்கறிகள், கரும்பு ஆகியவை வீட்டின் வாசலில் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டனர். பின்னர் புதுப்பானையை அடுப்பில் வைத்து பால், புத்தரிசியிட்டு பொங்கலிட்டனர்.
பொங்கல் பொங்கி வரும்போது குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!! என குலவையிட்டனர். மேலும் புதிதாக திருமணமான தம்பதியினர் இணைந்து புதிய பொங்கல் பானையில் ஒன்றாக பொங்கல் பொங்கியும் பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்றும் தல பொங்கலை மகிழ்ச்சி பொங்க குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தனர். வீடுகளில் சுவாமி தரிசனம் செய்தனர்.