தைப்பூசத் தேரோட்டம் ரத்துமயில் காவடி, இளநீர் காவடி எடுத்து பொதுமக்கள் சாமி தரிசனம்.
கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையத்தில் பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால், அதற்கான திருப்பணிவேலைகள் கடந்த ஆறு மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் தைப்பூசத்தை முன்னிட்டு புகழிமலை பாலசுப்ரமணியசாமி கோவில் தேரோட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேக பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதன் காரணமாக இந்த ஆண்டு தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று பக்தர்கள் புகழிமலை மேல் ஏறி சென்று பாலசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டாலும் இளநீர் காவடி, மயில் காவடி எடுத்து செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் காவடி எடுத்து வந்து புகழி மலை முருகனை தரிசித்து சென்றனர். இதே போன்று க.பரமத்தி அருகே உள்ள பாலமலை முருகன் கோவிலில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு பாலமுருகன் சிறப்பு அபிஷேகம்.
தைப்பூசத்தை முன்னிட்டு தேர் வீதி விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த பாலமுருகன். உலகம் முழுவதும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் கரூர் நகர பகுதியான தேர்வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள அழகன் பாலமுருகனுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம்,விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து சுவாமிக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த அழகன் பாலமுருகனுக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு, தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச பாலமுருகன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தைக் காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
குளித்தலையில் சுவாமிகள் விடையாற்றி நிகழ்வு.
குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழாவில் சுவாமிகள் சந்திப்பு மற்றும் இரவில் காவேரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து குளித்தலை அய்யர்மலை, ராஜேந்திரம், கருப்பத்தூர், முசிறி திருஈங்கோய் மலை, வெள்ளூர், பெட்டவாய்த்தலை உள்ளிட்ட 8 ஊர் சிவாலயம் சோமஸ் கந்தர் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். இரண்டாம் நாளான காவேரி ஆற்று படுகையில் சுவாமிகள் சந்திப்பு மற்றும் தீபாரதனை நடந்தது. இதை தொடர்ந்து பஸ் ஸ்டாண்டு, காந்தி சிலை முன் ஐந்து ஊர் சுவாமிகள் சந்திப்பு மற்றும் தீபாரதனைகளுடன் விடையாற்றி நிகழ்வு நடந்தது. எட்டு ஊரு சுவாமிகள் தீபாராதனை உடன் விடை பெற்று தங்கள் கோவில்களுக்கு திரும்பினர். தைப்பூச நிறைவு நிகழ்ச்சியில் பல்லாரக் காண பக்தர்கள் கலந்து கொண்டனர்.