Thaipusam 2025: தமிழ் கடவுள் என்று மக்களால் வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாளில் தைப்பூசம் மிகவும் முக்கியமானது ஆகும். நடப்பாண்டு தை மாதம் பிறந்தது முதலே தைப்பூசம் கொண்டாட்டமும் தொடங்கியது.

Continues below advertisement

நாளை தைப்பூசம்:

நடப்பாண்டிற்கான தைப்பூசம் நாளை கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஏற்கனவே கடந்த 5ம் தேதி உலகெங்கும் உள்ள முருகன் கோயில்களில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. 

Continues below advertisement

விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட அறுபடை முருகன் காேயில்களும், தமிழ்நாட்டில் உள்ள பிற முருகன் கோயில்களும் களைகட்டி காணப்படுகிறது. குறிப்பாக, திருச்செந்தூர் மற்றும் பழனி கோயில்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக லட்சக்கணக்கில் குவிந்து வருகின்றனர். தைப்பூச நாளான நாளை முருகன் கோயில்களில் முருகப்பெருமான் தங்கத்தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தர உள்ளார். 

லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்:

பக்தர்கள் பாத யாத்திரையாக வருவது மட்டுமின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக பக்தர்கள் அதிகளவு கூடும் முருகன் கோயில்களில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் லட்சக்கணக்கில் குவியும் பழனியிலும், திருச்செந்தூரிலும், திருப்பரங்குன்றத்திலும் வழக்கத்தை விட அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகளும், பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்வதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

பழனியில் மட்டும் தைப்பூசத்தை முன்னிட்டு 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

சிறப்பு பேருந்துகள்:

திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி உள்ளிட்ட கோயில்களுக்கு பக்தர்கள் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிவார்கள் என்பதால் அவர்களின் உடைமைகள் பாதுகாப்பாக இருப்பதையும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பக்தர்கள் அதிகளவு குவியும் முருகன் ஆலயங்களில் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

போலீஸ் பாதுகாப்பு:

திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள் கடலில் நீராடுவார்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் கடற்கரையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் வடபழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் பக்தர்கள் தரிசனத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  பழங்கள், பூக்கள் வரத்து அதிகரிப்பு:

தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக பூக்கள், பழங்கள் வரத்து அதிகளவில் காணப்பட்டது. நாளை தைப்பூசம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் பூக்கள், பழங்களின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இவற்றின் விலையும் சற்றே உயர்ந்துள்ளது. முருகனுக்கு மிகவும் உகந்த செவ்வாய் கிழமை நாளில் இந்த தைப்பூசம் வருவதால் முருக பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 

களைகட்டும் முருகன் கோயில்கள்:

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களும் தைப்பூசத்திற்காக களைகட்டி காணப்படுகிறது.