Thaipusam 2025: தமிழ் கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசமும் ஒன்றாகும். தை மாதம் என்றால் பொங்கல் பண்டிகை எவ்வளவு சிறப்போ அதுபோல தைப்பூசமும் மிகவும் சிறப்பானது ஆகும்.
தைப்பூச திருவிழா எப்போது?Thai
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் பிப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக முருக பக்தர்கள் முழு மூச்சில் தயாராகி வருகின்றனர். தைப்பூசமானது ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழாவாக முருகப் பக்தர்களால் கொண்டாடப்படும்.
நடப்பாண்டிற்கான தைப்பூசத் திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிப்ரவரி 5ம் தேதி அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொடியேற்றம் எப்போது?
புகழ்பெற்ற அறுபடை கோயில்களில் ஒன்றான பழனியில் வரும் பிப்ரவரி 05ம் தேதியான நாளை மறுநாள் பெரியநாயகி அம்மன் கோயிலில் இரவு 7.30 மணியளவில் கொடியேற்றம் நடக்க உள்ளது. தைப்பூசத் திருவிழாவான 6ம் நாளான வரும் 10ம் தேதி திருக்கல்யாணம் நடக்க உள்ளது. அன்றைய இரவில் வெள்ளி ரதத்தில் முருகன் வீதி உலா வர உள்ளார்.
தைப்பூசம் கொண்டாடப்படும் 11ம் தேதி முருகன் தங்க தேரில் பவனி வர உள்ளார். பழனி மட்டுமின்றி புகழ்பெற்ற முருகன் கோயில்களில் தைப்பூச நாளில் முருகப்பெருமானின் தேரோட்டம் நடைபெறும். தைப்பூச நாளில் பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த மலர்காவடி, பால் காவடி, பன்னீர்காவடி, இளநீர் காவடி, தீர்த்த காவடி, வெல்ல காவடி என பல காவடிகளை எடுத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.
குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்:
பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி உள்ளிட்ட பல முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வார்கள். இந்த நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோயில்களில் குவிவார்கள்.
பக்தர்கள் லட்சக்கணக்கில் குவியும் பழனி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கூடுதல் முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. பழனியில் மட்டும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முருகன் கோயில்களுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.