மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


 


மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருவிழா


 

உலகப் பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தை மாதத்தில் தைப்பூசத்தெப்பத் திருவிழா நடைபெறும். இவ்விழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வையொட்டி சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  இதில் மீனாட்சியம்மன்கோயில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தை தெப்பத்திருவிழா இன்று தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவினை முன்னிட்டு  மீனாட்சி சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன், காலை, மாலை என இருவேளைகளிலும் கோயிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளிலும் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பா்.

 

முக்கிய விழாக்கள் எப்போ தெரியுமா?


 

இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 5 ஆம் தேதியன்று விழாவின் 6-ஆம் நாள் நிகழ்வாக  திருஞானசம்பந்தர் சுவாமிகள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும்,  9ஆம் தேதியன்று விழாவின் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்வும், 10ஆம் தேதியன்று  கதிரறுப்பு நிகழ்வும், 11 ஆம் தேதியன்று விழாவின் சிகர நிகழ்வான தெப்ப உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறும். இத்திருவிழாவின்  முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவ நாளான 11ஆம் தேதியன்று. அதிகாலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் இத்திருக் கோயிலிலிருந்து புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு மிக விமர்சையாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து தெப்பம் சேவார்த்திகளால் வடம் பிடித்து, காலையில் இரண்டு முறை சுற்றி வந்தும், மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, பத்தி உலாத்தி தீபாராதனை நடைபெற்று, மீண்டும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி இரவில் ஒரு முறையும் தெப்பம் சுற்றி வரும்.

 

மிதவை தெப்பதேர் அமைக்கும் பணிகள்


 

மேலும் அதிகாலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலிலிருந்து, மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பம் உற்சவம் நடைபெற்று, இரவு திருக்கோயிலுக்கு வந்து சேரும் வரை அன்றைய தினம் திருக்கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும். தெப்பத்திருவிழா நாளில் பக்தர்கள் நலன் கருதியும், வெளியூர்களிலிருந்து வருபவர்களின் நலன் கருதியும் கலைக்கூடம் (ஆயிரங்கால் மண்டபம்) திறந்து வைக்கப்படும் உள்ளே வருபவர்கள் வடக்கு கோபுரம் வாசல் வழியாக காலை 07.00 மணி முதல் 12.30 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் தெப்பத்திருவிழா தொடங்கிவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளா மிதவை தெப்பத் தேர் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது.