தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகனுக்கு மிக உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசம். தைப்பூச நன்னாளில் மற்ற நாட்களை காட்டிலும் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அலைமோதும். நடப்பாண்டிற்கான தைப்பூசம்  கொண்டாடப்படுகிறது.


தைப்பூசம்:


தை மாதத்தில் பௌர்ணமி திதியும், பூச நட்சத்திரமும் வரும் நாளே தைப்பூசம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்கள் உள்பட பெரும்பாலான கோயில்களில் தைப்பூச கொண்டாட்டம் ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசம் என்பதால், கடந்த ஒரு வாரமாகவே பக்தர்கள் கூட்டம் முருகன் கோயில்களில் அதிகளவு காணப்பட்டது.




பக்தர்கள் விரதம்:


தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு பாத யாத்திரையாகவோ அல்லது வாகனங்களிலோ சென்று வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், காவடி எடுத்தும், வேல் குத்தியும் தங்களது விரதத்தை நிறைவேற்றுவார்கள். தைப்பூச திருநாளில் முருகப்பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி மற்றும் திருப்புகழ் ஆகிய பாடல்களை கோயில்களில் பக்தர்கள் பாராயணம் செய்வது வழக்கம் ஆகும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற முருகன் கோயிலிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




 கோவில்களில் குவிந்த பக்தர்கள்


 நேற்று தமிழ்நாடு முழுவதும் நடந்த தைப்பூச விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு   சாமி தரிசனம் மேற்கொண்டனர்.  இதன் காரணமாக அனைத்து முருகர் கோவில்கள் சிவன் கோவில்கள் தைப்பூசம் விழா நடைபெறும் கோவில்களில் பக்தர்கள் அலைமோதினர்.  பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள்  பூஜைகள் நடைபெற்றது.  நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள்  சாமி தரிசனம் மேற்கொண்டு சென்றனர்.




 ஸ்ரீ  பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் Brahma Purishvarar Temple  


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம்  பெருநகர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்   கோயில் ( perunagar brahmapureeswarar temple) அமைந்துள்ளது. இக்கோவில் சுயம்புலிங்கமாக மூலவர் காட்சியளிக்கிறார். மூலவர் சன்னதி கஜபிரதிஷ்டை பச்சை கருங்கல்லால் கட்டப்பட்டது. இக்கோயிலில் ஈசான மூலையில் பச்சை கல்லிலான மகா பைரவர் வாகனமின்றி தனித்து காட்சியளிப்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.  இக்கோவில் காஞ்சி மாநகரின்  தென் எல்லையாக கச்சியப்ப முனிவரால் போற்றப்படுகின்ற திருத்தலம் கோயிலில் பல்வேறு விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.






அந்தவகையில் ,பெருநகர் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசம் விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வெகு விமரிசையாக தைப்பூச விழா துவங்கியது. இதனை அடுத்து கொடியேற்றம் நடைபெற்றது. பகல் மற்றும் இரவு வேளையில் சுவாமி புறப்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆறாம் நாள் காலை திருக்கல்யாணம் ரிஷப வாகன சேவை மற்றும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தைப்பூச பெருவிழாவில் இரவு உற்சவங்கள் சிறப்பு  இடத்தை பிடிக்கும். திருக்கோவிலில் சுவாமி  யானை வாகனத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏழாம் நாள் உற்சாகத்தை முன்னிட்டு திருத்தேர் உற்சவம்  விமரிசையாக நடைபெற்றது.  




 


கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.  திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை கிராம பெரியோர்கள் மற்றும்  பக்தர்கள் செய்திருந்தனர். நேற்று தைப்பூச விழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக  அபிஷேகங்கள் மற்றும் சாமிக்கு பூஜை நடைபெற்றது. தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார்கள் மகா உற்சவம் நடைபெற்றது.  சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு  காத்திருந்த பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.  இரவு உற்சவமாக கைலாச பிடவாகனம் ( ராவணன்)  வாகனத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.