திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி லட்சக்கணக்கான குவிந்தனர்.




அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 1:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் 7.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் சண்முவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு உபயதாரர்கள் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.




தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இதனால் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரை முருக பக்தர்கள் பலவிதமான காவடி எடுத்தும், நீண்ட வேல்களால் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் ஏராளமான பக்தர்கள் கோயில் கிரிபிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் மெகா திட்ட பணிகள் நடப்பதால் வருவதால், பக்தர்கள் வந்த வாகனங்கள் நிறுத்துவதற்கு கோயில் வளாகத்தில் போதுமான இடவசதி இல்லை. அதனால் பக்தர்களின் வாகனங்கள் நகரின் வெளியே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சிரம்மின்றி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.




பாதயாத்திரை பக்தர்கள் குழுவினர் சிலர் கடற்கரையில் மணலால் சுவாமி பூடம் அமைத்து வழிபாடு செய்தனர். மேலும் சிலர் தங்கள் கொண்டு வந்த முருகர் சிலை மற்றும் காவடியை வைத்து வழிபாடு செய்தனர். திருச்செந்தூர் நகர பகுதியில் மற்றும் நகரின் வெளியே பல தனியார் அமைப்புகள் சார்பில் பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் மற்றும் அறங்காவலர்கள, இணை ஆணையர் கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.




தைப்பூசம் திருவிழா என்றாலே பழனி முருகன் கோயில் தான் விஷேசமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கூட்டத்திற்கு இணையாக தைப்பூச திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதபாத்திரையாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து திருச்செந்தூரில் குவிந்தனர். இவர்களில் பலர் 5 வயது முதல் சிறுவர்கள் யாத்திரையில் ஆண்டி கோலத்தில் வந்தனர். அதேபோல் நீண்ட வேல்களால் அலகு குத்தியும் காவடி எடுத்தும் வந்தனர். மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருச்செந்தூர் கோலாகலமாக காட்சியளித்தது.