உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிரான் பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.


நவீன இரும்பு, எஃகு அல்லது சிமெண்ட் ஆகியவை எதுவும் இல்லாத வகையில் 380 தூண்களும் முற்றிலுமாக கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து விதவிதமான வித்தியாசமான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியல் இதோ.. 


108 அடி நீள ஊதுபத்தி: 


3,610 கிலோ எடையும் 3.5 அடி அகலமும் கொண்ட 108 அடி நீள ஊதுபத்தி, குஜராத்தின் வதோதராவில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதனை தயார் செய்ய சுமார் ஆறு மாதங்களுக்கும் மேல் ஆனது என்றும்  5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒன்றரை மாதம் வரை நீடிக்கும் என்றும் இதன் மணம் பல கிலோமீட்டர் வரை வீசும் என்றும் ஊதுபத்தி தயார் செய்தவர் தெரிவித்துள்ளார். 376 கிலோ குக்குல் (கம் பிசின்), 376 கிலோ தேங்காய் மட்டைகள், 190 கிலோ நெய், 1,470 கிலோ பசுவின் சாணம், 420 கிலோ மூலிகைகள் ஆகியவை கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. 


ராமர் கோயில் வடிவிலான நெக்லஸ்: 


சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், ராமர் கோவிலின் கருப்பொருளில் 5,000 அமெரிக்க வைரங்களைக் கொண்டு, இரண்டு கிலோ வெள்ளியில் பயன்படுத்தி நெக்லஸை உருவாக்கியுள்ளார். 35 நாட்களில் 40 கைவினை கலைஞர்களால் இந்த டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நெக்லஸை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. 


1,265 கிலோ எடைகொண்ட லட்டு: 


ஹைதரபாத்தை சேர்ந்த நபர் ஒருவர் 1,265 கிலோ எடையில் லட்டு தயார் செய்து, அதனை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். 


ஸ்ரீ ராமர் கோயிலை சித்தரிக்கும் பட்டு பெட்ஷீட்: 


தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டு உற்பத்தியாளரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீராமர் கோயிலை சித்தரிக்கப்பட்டு படுக்கை விரிப்பை(bedsheet), ஸ்ரீராமர் கோயிலின் 'யஜ்மன்' அனில் மிஸ்ராவிடம், விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் வழங்கினார். 


44 அடி நீளமுள்ள பித்தளை கொடி கம்பம்: 


குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், 5,500 கிலோ எடையுள்ள 44 அடி நீள பித்தளைக் கொடி கம்பம் மற்றும் 6 சிறிய கம்பங்களை அகமதாபாத்தில் 'பிரான் பிரதிஷ்டா' விழாவுக்காக வழங்கினார். 


குஜராத்தைச் சேர்ந்த 56 அங்குல 'நகரு' (drums):


தரியாபூரில் உள்ள அகில இந்திய டப்கர் சமாஜால் தங்கப் படலத்தால் செய்யப்பட்ட 56 அங்குல 'நகரு' (கோயில் டிரம்) கோயிலின் முற்றத்தில் நிறுவப்பட வழங்கப்பட்டுள்ளது. 


400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி


உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகாரைச் சேர்ந்த பூட்டு தொழிலாளி சத்ய பிரகாஷ் ஷர்மா 10 அடி உயரம், 4.6 அடி அகலம் மற்றும் 9.5 அங்குல தடிமன் கொண்ட 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவியை வடிவமைத்துள்ளார். இதனை அவர் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். 


2100 கிலோ எடைகொண்ட மணி: 


உத்தரபிரதேச மாநிலம் எட்டாவில் உள்ள ஜலேசரில் இருந்து 2100 கிலோ எடையுள்ள அஷ்டதாது மணி (8 உலோகங்களை கொண்டு தயார் செய்யப்பட்ட மணி), கோயில் வளாகத்தில் மிகப்பெரிய மணியாக நிறுவப்பட்டுள்ளது. இந்த கம்பீரமான மணி, ரூ. 25 லட்சம் கட்டுமான செலவில், ஆறு அடி உயரம் மற்றும் ஐந்து அடி அகலத்தில் உள்ளது. நான்கு ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்ட, மணியின் அதிர்வு வெகு தொலைவில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


7000 கிலோ எடைகொண்ட ராம் ஹல்வா: 


நாக்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் பிரான் பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 7,000 கிலோ 'ராம் அல்வா' வழங்குவதாக அறிவித்து அதனை தயார் செய்து பிரான் பிரதிஷ்டையன்று பக்தர்களுக்கு வழங்கினார். 


திருப்பதி தேவஸ்தானம் மூலம் 1 லட்சம் லட்டுகள்: 


திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஜனவரி 22 ஆம் தேதி பக்தர்களுக்கு விநியோகிக்க ஒரு லட்சம் லட்டு அனுப்பப்படும் என்று அறிவித்தது. அதன்படி ஒரு லட்சம் லட்டு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. 


தங்க முலாம் பூசப்பட்ட பாத அணிகள்:


 கரசேவகரின் மகன் ஹைதராபாத்தில் இருந்து அயோத்திக்கு நடந்து சென்று, ராமருக்கு தங்க முலாம் பூசப்பட்ட பாத அணிகளை காணிக்கையாக அளித்தார். ஏறக்குறைய 8,000 கி.மீ. தூரம் நடந்து சென்று இந்த பாத அணிகளை வழங்கினார். 


1,100 கிலோ எடை கொண்ட விளக்கு: 


வதோதராவைச் சேர்ந்த விவசாயி அரவிந்த்பாய் மங்கல்பாய் பட்டேல், 1,100 கிலோ எடையுள்ள, பஞ்சலோக (தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம் மற்றும் இரும்பு) விளக்கை பரிசாக அளித்துள்ளார். சுமார் 851 கிலோ நெய்யின் கொள்ளளவு கொண்ட விளக்கை வடிவமைத்து வழங்கியுள்ளார்.