Thaipusam 2024 Date: பக்தர்களே! முருகனுக்கு உகந்த தைப்பூச திருநாள்! எப்போது கொண்டாடப்படுகிறது?

Thaipusam 2024 Date in Tamilnadu: தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக தைப்பூசத் திருநாள் உலகெங்கும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

Continues below advertisement

தமிழ் கடவுள் என்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் வணங்கப்படுபவர் முருகன். முருகப்பெருமானுக்கு உகந்த நாளில் ஒன்றாக திகழ்வது தைப்பூசம் ஆகும். உலகெங்கும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச கொண்டாட்டம் களைகட்டும். அன்றைய தினம் பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

Continues below advertisement

தைப்பூசம் எப்போது?

கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையாக தை மாதம் பிறந்தது. இதையடுத்து, தைப்பூச கொண்டாட்டத்திற்கு முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தைப்பூசமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை வருகிறது. இதனால், இந்த தைப்பூசம் இன்னும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. வரும் 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால், 25ம் தேதியே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி வரும் 24ம் தேதி இரவு 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ம் தேதி இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

களைகட்டும் முருகன்  கோயில்கள்:

தைப்பூச தினத்தில் முருகன் கோயில்கள் களைகட்டி காணப்படும். குறிப்பாக, அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் குவிவார்கள். தைப்பூச தினத்தை முன்னிட்டு அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடைபெறும். அறுபடை வீடுகள் தலங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

பக்தர்கள் விரதம்:

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு பாத யாத்திரையாகவோ அல்லது வாகனங்களிலோ சென்று வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், காவடி எடுத்தும், வேல் குத்தியும் தங்களது விரதத்தை நிறைவேற்றுவார்கள். தைப்பூச திருநாளில் முருகப்பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி மற்றும் திருப்புகழ் ஆகிய பாடல்களை கோயில்களில் பக்தர்கள் பாராயணம் செய்வது வழக்கம் ஆகும்.  

தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற முருகன் கோயிலிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola