தஞ்சாவூர்: உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம்


உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.


பலபெயர்களால் அழைக்கப்படுகிறது


தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.


தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்ட கோவிலை காட்டியது உலக அதிசயமாக பார்க்கப்படுகிறது. 10ம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக்கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் ஆனது.


18 நாட்கள் நடக்கும் சித்திரை பெருவிழா


இத்தகைய புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா 18 நாள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு இன்று (6ம் தேதி) காலை 6.30 மணி முதல் 7.45 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று மாலை படிச்சட்டத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகளின் வீதியுலா நடைபெறுகிறது.


விழா நாட்களில் காலை, மாலை வேளைகளில் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 20ம் தேதி காலை 7 மணிக்கு நான்கு ராஜவீதிகளில் தேரோட்டமும், 23ம் தேதி சிவகங்கை பூங்காவில் தீர்த்தவாரியும் நடக்கிறது.


ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதா மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் பலர் செய்துள்ளனர்