இன்றைக்கு சமூகங்கள் நவீனமயமாக மாற மாற, கலாச்சாரங்கள், முற்றிலும் “உடல் கலாச்சாரங்கள்” என்றே மாறிக்கொண்டிருக்கின்றன. உடல் என்பது அதிகளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் அங்கமாக ஆகியுள்ளது. நாம் வளர்ந்து பரிணமிக்கும்போது, மற்ற அம்சங்கள் அதிக முக்கியத்துவம் பெறவேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக, உடல் என்பது வேறு எதைக்காட்டிலும் அதிக முக்கியமானதாகியுள்ளது. எல்லாமே உடல் குறித்ததாகவே இருக்கிறது.
சமூக கட்டமைப்பு:
சமூகம் தன்னைக் கட்டமைத்துக்கொண்டிருக்கும் விதமும், நமது குழந்தைகளின் மனங்களை நாம் வடிவமைக்கும் விதமும் எப்படி இருக்கிறது என்றால், ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ நீங்கள் பார்த்தால், உங்களுக்கு ஒருவித இன்பம் தரக்கூடிய ஏதோ ஒன்றாகத்தான் அவர்களை நீங்கள் பார்க்கவேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் இன்றைய சமூகம் மிகத்தீவிரமாக சென்றுகொண்டிருக்கிறது. தங்களை ஒரு ஆணாக அல்லது பெண்ணாக இல்லாமல், மனிதர்களாகப் பார்க்கும் மக்களைக் காண்பதற்கு நான் விரும்புகிறேன்.
உங்கள் வாழ்வின் சில கணங்களில் மட்டும்தான் ஒரு ஆணாக அல்லது ஒரு பெண்ணாக ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை ஏற்கவேண்டிய தேவை இருக்கிறது. பாலுணர்வு என்பது உங்களின் ஒரு மிகச் சிறிய பகுதி. வாழ்க்கையை உள்ளபடியே மக்கள் பார்த்தால், பாலுணர்வு அதற்குரிய சரியான இடத்தில் இருக்கும் - அதற்குரிய இடம் உங்கள் வாழ்க்கையில் ஒரு மிகச்சிறிய இடம். அப்போது அது இவ்வளவு பெரிதாக இருக்காது. அப்படித்தான் அது இருக்கவேண்டும். ஒவ்வொரு உயிரினத்திலும் அப்படித்தான் இருக்கிறது. எல்லா நேரமும் விலங்குகள் அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டு இருப்பதில்லை. அவைகளுக்குள் அந்த உணர்வு இருக்கும்போது, அது இருக்கிறது.
ஆண், பெண் என்ற பாத்திரம்:
இல்லையென்றால் அவைகள் ஆண் யார்? பெண் யார்? என்று இடையறாமல் சிந்திப்பதில்லை. அதனுடன் சிக்கிப்போயிருப்பது மனிதர்கள் மட்டும்தான். ஒரு ஆணாக அல்லது ஒரு பெண்ணாக நீங்கள் எதை அழைக்கிறீர்களோ, அது ஒரு குறிப்பிட்ட இயற்கை செயல்முறையை செயல்படுத்துவதற்கான சிறு உடலியல் வித்தியாசத்தை மட்டும்தான் சார்ந்திருக்கிறது.
உங்கள் பாலினத்தை நீங்கள் எல்லா நேரமும் வீதியில் சுமந்து செல்ல வேண்டியதில்லை. எல்லையுள்ள ஒரு சில உடல் பாகங்களுடன் உங்களையே நீங்கள் அடையாளப்படுத்திக்கொண்டால், நீங்கள் இயல்பாகவே அந்த விதமாகத்தான் நடத்தப்படுகிறீர்கள். நாம் ஏன் ஒரு உடல் உறுப்புக்கு அவ்வளவு அதிகமான முக்கியத்துவம் அளித்திருக்கிறோம்? எந்த உடல் உறுப்பும் அந்த விதமான முக்கியத்துவம் வழங்கப்படுவதற்கு தகுதியானதில்லை.
எந்த உறுப்புக்காவது அந்த விதமான முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றால், ஒருவேளை மூளை வேண்டுமானால் அதற்குத் தகுதியானதாக இருக்கலாம், பிறப்புறுப்புகள் அல்ல. ஆதலால், ஒரு ஆண் அல்லது ஒரு பெண் என்ற பாத்திரத்தை ஒரு நாளின் 24 மணிநேரமும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் அந்த பாத்திரத்தை ஏற்பதற்கான சில சூழ்நிலைகள் உள்ளன. மற்ற நேரங்களில், நீங்கள் ஒரு ஆணாகவும் இருக்கவேண்டாம், ஒரு பெண்ணாகவும் இருக்கவேண்டாம். ஒரு ஆணாக அல்லது ஒரு பெண்ணாக நீங்கள் தேங்கிவிட்டால், நீங்கள் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கமாட்டீர்கள்.
வாழ்க்கையின் பொருள்தன்மை:
வாழ்க்கையின் பொருள்தன்மையில் மிக அதிகமாக முதலீடு செய்வதில்தான் பிரச்சனை அடிப்படையாக வேர்கொண்டுள்ளது. இந்தப் பொருள் உடல்தான் உச்சபட்ச எல்லை என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். உங்கள் உடல்தன்மையின் எல்லைகள் வாழ்க்கையின் உச்சபட்ச எல்லைகளாகும் கணமே, உங்கள் சுவாசத்தைக்கூட நீங்கள் அனுபவத்து உணர்வதில்லை, உங்களை உயிரோடு வைத்திருப்பது எதுவோ அதன்
அடிப்படையையே உங்கள் அனுபவத்தில் நீங்கள் உணர்வதில்லை.
ஆன்மீக நோக்கம் கொண்ட சமூகங்கள் எங்கு இருந்தபோதும், ஒரு ஆணாக அல்லது ஒரு பெண்ணாக இருப்பது பிரச்சனையாக இருந்ததில்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு ஆணாக அல்லது ஒரு பெண்ணாக இருப்பது அடிப்படையில் உடல்ரீதியானது.
ஆன்மீகம் என்பது சரி அல்லது தவறு குறித்ததோ, அல்லது கடவுள் அல்லது சொர்க்கம் குறித்ததோ அல்ல. ஆன்மீகம் என்றால் நீங்கள் எதையோ நம்பவேண்டும், அல்லது ஒரு தத்துவத்தை வைத்திருக்க வேண்டும், அல்லது வேறு ஏதோவொன்று என்று அர்த்தமில்லை. ஆன்மீகத்தின் ஒட்டுமொத்த பரிமாணமும் உடல்தன்மை தாண்டி வளர்வதற்கானது.
உங்கள் வாழ்க்கை அனுபவம் உடல்தன்மையின் எல்லைகளைக் கடக்கிறது என்றால், அப்போது நீங்கள் ஆன்மீகத்தன்மையானவர் என்று நாம் கூறுகிறோம். உடலியல் தாண்டிய ஒன்று உங்களுக்குள் வாழும் நிதர்சனமாக இருந்தால், உங்கள் உடலியலை நீங்கள் மிகமிக எளிமையாகக் கையாளமுடியும்.
பாலினத்தில் இருந்து விடுதலை:
ஒருவர் தன்னையே பொருள் உடலாக உணரும்வரை, அதனுடன் சிக்கிப்போவதிலிருந்து தப்பிக்க முடியாது. பொருள் உடலைவிட அதிகமான ஏதோ ஒன்றாக மக்கள் தங்களையே உணரத்தொடங்கும்போது மட்டும்தான், தந்திரம் இருக்கமுடியும். ஆன்மீக செயல்முறை முழுவதும், யோக அறிவியல் முழுவதும் இதைப்பற்றியதாகவே இருக்கிறது – நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, உங்கள் பொருள் உடலின்
எல்லைகளைத் தாண்டி, சுயத்தை உணர்வதற்கு உங்களுக்கு உதவிசெய்வது. அதில்தான் விடுதலை இருக்கிறது.
பாலியல்ரீதியாக விடுதலையாவதனால் ஒருவர் விடுதலையாவார் என்பது கிடையாது. உங்கள் பாலினத்திலிருந்து நீங்கள் விடுதலையானால், அப்போது மட்டும்தான் நீங்கள் விடுதலையாகிறீர்கள்.
இந்தியாவின் செல்வாக்கு மிக்க ஐம்பது நபர்களில் ஒருவரான சத்குரு, ஒரு யோகியாக, ஞானியாக, தொலைநோக்குப் பார்வை உடையவராக, அதிகம் விற்பனையாகும் புத்தக எழுத்தாளராக நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளவராகத் திகழ்கிறார்.
சத்குருவிற்கு 2017ம் ஆண்டில் இந்திய அரசு பத்ம விபூஷன் விருதை வழங்கியது, இது தனிச்சிறப்பு வாய்ந்த சிறந்த சேவைக்காக இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய வருடாந்திர விருதாகும். அவர் 400 கோடிக்கும் அதிகமான மக்களைத் தொட்டுள்ள உலகின் மிகப்பெரிய மக்கள் இயக்கமான கான்சியஸ் ப்ளானட் - மண் காப்போம் இயக்கத்தைத் துவங்கியவரும் ஆவார்.
(மேற்கண்ட கட்டுரையில் இடம் பெற்றுள்ள அனைத்தும் சத்குருவினுடைய கருத்துகள் மட்டுமே ஆகும்)