தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யாவாடி பிரத்தியங்கராதேவிக்கு தீபாவளியன்று நடக்கும் இனிப்பு யாகம் பற்றி தெரியுங்களா?

Continues below advertisement

மகாபிரத்தியங்கராதேவியை சித்தர்கள், அகத்தியர், பஞ்சபாண்டவர்கள், ஸ்ரீராமர், லெட்சுமணர், இந்திரஜித் (மேகநாதன்) ஆகியோர் பூஜித்து வந்தனர். இந்திரஜித் ஸ்ரீராமரோடு யுத்தம் செய்து தோற்றுப் போனார். உடனே தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள ஐவர்பாடி எனும் அய்யாவாடியில் ஸ்ரீ அதர்வன பத்திரகாளியான பிரத்தியங்கரா தேவியை வழிபட முடிவு செய்தார். ஐவர்பாடியில் உள்ள பிரத்தியங்கரா தேவி சிம்மமுகத்தோடும், 18 திருக்கரங்களோடும், 4 சிம்மம் பூட்டிய ரதத்தில் லட்சுமி சரஸ்வதியோடு காட்சியளிக்கும் பிரத்தியங்காரா தேவியை வழிபட்டான் இந்திரஜித். 

நிகும்பலா யாகம் செய்ய விபீசனர், ராமரிடம் சென்று இந்திரஜித்தை காணவில்லை. அவர் யாகம் செய்து முடித்துவிட்டால், அவரை யாரும் ஜெயிக்க முடியாது என்று சொல்ல, ராமர் உடனடியாக ஐவர்பாடி வந்து அம்பிகையை வழிபட்டார். அம்பிகை ராமருக்கு அனுக்கிரகம் செய்துவிட்டு மறைந்துவிட்டாள். மேகநாதன் யாகம் செய்ய முடியாமல் பல இடங்களிலும் தேடி அம்பிகையை காணாமல், யுத்தத்தில் உயிர்பிரியும் தருவாயில் இருந்த போது, அம்பிகை காட்சி தந்து தர்மமே வெல்லும் என்றார். அம்பிகை திருவடியை அடைந்தார் இந்திரஜித். 

Continues below advertisement

இந்திரஜித் வரம் பெற்ற தலமாக ஐவர்பாடி விளங்கியது. இந்திரஜித் வழிபட்டதலமாக ஐவர்பாடி விளங்கியதால் இன்றும் எட்டு திசைகளிலும் மயான பூமியாகவும், ஒரே ஒரு ஆலமரத்தில் அதிசய ஐந்து வகையான இலைகளை கொண்ட தல விருட்சகமாக உள்ளது. பஞ்சபாண்டவர் பூஜித்தபடியால் ஐவர்பாடி என்ற நாமம் சம்மந்தரால் திருக்கோவையில் பாடி நான்கும் என்ற பதிகத்தோடு காரணப்பெயர் உள்ளது. 

இந்த தேவியை வழிபாடு செய்தால் பிறரால் ஏவப்படும்  பில்லி, ஏவல், வைப்பு உள்ளிட்ட 64 விதமான சாபங்கள், மாதுருசாபம், பிதுர்சாபம், நர, மிருக பசு, பஷி இவர்களால் ஏற்படும் சாபங்களும் நிவர்த்தி ஆகும். தற்போது, கும்பகோணம் அருகே உள்ள அய்யவாடியில் தர்மசம்வர்த்தினி அம்பிகா சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வர சுவாமி கோயிலில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு மகா பிரத்தியங்கிராதேவி அருள் பாலிக்கிறார்.

பஞ்சபாண்டவர்கள் வழிபட்டு அரசு பெற்றதும், அவர்கள் பெயராலேயே இத்தலம் ஐவர்பாடி என புகழ் பெற்றது. இங்கு அமாவாசை தோறும் நிகும்பலா யாகம் நடைபெறும். 11 மாதங்கள் நிகும்பலா யாகம் நடைபெறும், மிளகாய் தான் யாகத்தில் பிரதானமாக கொட்டப்படும், ஆனால் யாககுண்டத்திலிருந்து கார நெடியே வராது. ஐப்பசி மாதத்தில் மட்டும் வரும் அமாவாசை அன்று தீபாவளி நாள் என்பதால், அன்று இனிப்பு யாகம் நடைபெறும். 12 வகையான இனிப்பு பலகாரங்களை தலா 100 கிலோ வீதம் படைத்து யாக குண்டத்தில் போடுவது வழக்கம்.

ஒவ்வொரு தீபாவளியன்றும் இந்த இனிப்பு யாகம் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.