தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களும், பண்டிகைகளும் ஏராளமாக உள்ளது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க விழா சூரசம்ஹாரம். சூரபத்மனை முருகன் வதம் செய்ததை கொண்டாடும் விதமாக சூரசம்ஹாரம் கொண்டாடப்படுகிறது.
சூரசம்ஹாரம்:
கந்தசஷ்டி விரதம் இருந்த பின்னர் சூரசம்ஹாரம் நடத்தப்பட்டு முருகப்பெருமானின் திருக்கல்யாணத்துடன் இந்த சூரசம்ஹார விழா அரங்கேறுவது வழக்கம். நடப்பாண்டிற்கான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 27ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, சூரசம்ஹாரத்திற்கான கந்த சஷ்டி விரதம் நாளை தொடங்குகிறது.
இதற்காக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். சூரசம்ஹாரம் முருகனின் அறுபடை வீடான திருச்செந்தூரில் நடைபெறும். இருப்பினும் அறுபடை வீடுகளும், உலகெங்கிலும் உள்ள முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விரதத்திற்கான சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற உள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
களைகட்டிய திருச்செந்தூர்:
சூரசம்ஹாரம் நடைபெற உள்ள திருச்செந்தூர் களைகட்டி காணப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்து வந்தாலும் கந்தசஷ்டி விரத விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் தொய்வில்லாமல் நடந்து வருகிறது. பக்தர்களும் ஆர்வத்துடன் சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். மேலும், இந்து சமய அறநிலையத்துறையினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சூரசம்ஹாரத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு நள்ளிரவு சுமார் 1 மணிக்கு கோயில் திறக்கப்படும். அதிகாலை 1.30 மணிக்க சாமியின் விஸ்வரூப தரிசனத்தை பக்தர்கள் வழிபடலாம். பின்னர், அதிகாலை 2 மணிக்கு மூலவர் முருகன் மூர்த்திக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும்.
பூஜைகள்:
பின்னர், காலை 6 மணிக்கு ஸ்ரீ ஜெயந்தி நாதர் யாகசாலை வருகை மற்றும் பூஜை நடைபெறும். பின்னர், காலை 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கும். தீபாராதனை, யாகசாலையில் ஸ்ரீஜெயந்திநாதருக்கு சிறப்பு பூஜை, காப்பு கட்டுதல் ஆகிய முக்கிய வைபவங்கள் நடக்கும்.
கந்த சஷ்டி மண்டபத்தில் ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜையுடன் 4 மணிக்கு அடுத்த பூஜை தொடங்குகிறது. பின்னர், சாயரட்சை தீபாராதனஜை, சஷ்டி மண்டப தீபாராதனை, ராகால அபிஷேகம் நடைபெற உள்ளது. தங்க தேர் இரவில் நடைபெறும். இதைத் தொடர்ந்து ஏகாந்த தீபாராதனை நடைபெறும். சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கடற்கரைக்கு குவிவார்கள். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.