தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள சுவாமிமலையின் பெருமையை கேட்டு வெளிநாட்டினரும் தேடிவந்து பார்த்து செல்கின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழும் திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை தலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்று அழைக்கப்படுகிறார். அதனால்தான் இந்த ஊரின் பெயரும் சுவாமிமலை என்றே கூறப்படுகிறது.
படைப்புத் தொழில் செய்து வந்ததால் பிரம்மனுக்கு ஆணவம் ஏற்பட்டது. இதையறிந்த முருகன் பிரம்மனிடம், ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?” என்று கேட்டார். ஆனால் பிரம்மனுக்கு பதில் தெரியாமல் திகைத்தார். இதனால் அவரைத் தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகன். சிவபெருமானே நேரில் வந்து கேட்டுக் கொண்டதற்குப் பின்னர்தான், பிரம்மனை விடுதலை செய்தார். அப்போது சிவபெருமான் முருகனிடம், பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?” என்று கேட்க நன்றாகத் தெரியுமே என்று முருகன் கூற, அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?” என்றார் ஈசன்.
“உரிய முறையில் கேட்டால் சொல்வேன்” என்று பதில் கூறினார் முருகன். அதன்படி சிவபெருமான் இத்தலத்தில், முருகனுக்கு சீடனாக தரையில் பவ்யமாக அமர்ந்தபடி, முருகனிடம் பிரணவத்திற்காக பொருளை உபதேசமாக பெற்றார். அன்று முதல் முருகன், ‘சுவாமிநாதன்’ என்றும், ‘பரமகுரு’ என்றும், ‘தகப்பன் சுவாமி’ என்றும் போற்றப்பட்டார். இக்கோவிலில் சுவாமிநாதன் கம்பீரமாக, நான்கரை அடி உயரமுள்ள திருவுருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். இதில் இன்னொரு விஷயமும் இருக்கு. சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் சுவாமிமலை. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் கருங்கற் கோவில்கள் இருப்பது பிரமிப்பூட்டும் விந்தைகளில் ஒன்றாகும்.
சுவாமிமலையில் மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும், முதற் பிரகாரம் கட்டுமலையின் உச்சி யில் சுவாமியை சுற்றியும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோயிலின் மேலே செல்ல அறுபது படிகள் ஏற வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. இப்படி ஏகப்பட்ட பெருமைகளை கொண்ட சுவாமிமலையை பற்றி அறிந்து கொண்டு பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து செல்கின்றனர் என்பதும் மிக முக்கியமான ஒன்று. சமீபத்தில் ஜப்பானில் இருந்து ஒரு குழுவினர் தமிழ் மொழியின் மீது அதீத பற்றும், முருகன் மீது பக்தியும் கொண்டு தமிழகம் வந்து கோயில்களுக்கு சென்றனர்.
அவர்கள் சென்றதில் முக்கியமான ஒரு கோயில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலில், திருமண மண்டபங்களும், வசதியான தங்கும் விடுதிகளும் உள்ளன. இதனால்தான் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் சுவாமிமலைக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.