அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் நவம்பர் 13) முதல் கந்த சஷ்டி விழா தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகின்ற 18ம் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.




அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது.  இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நாளை 18ம்தேதி நடக்கிறது. 19ம்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. உலக பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழாவில்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகம், விடுதிகள், தனியார் விடுதிகள், சமுதாய விடுதிகளில் தங்கியிருந்து விரதமிருப்பது தனி சிறப்பாக கருதப்படுகிறது.


இந்த விழா நடக்கும் 7 நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்தாண்டை போலவே இந்தாண்டும் கோயில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.




 

திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். எனவே பயணிகளின் வசதிக்காக சென்னை - திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06001) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 17 இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறு நாள் மதியம் 12.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.



 

மறு மார்க்கத்தில் திருச்செந்தூர் - தாம்பரம் சிறப்பு ரயில் (06002) திருச்செந்தூரில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருச்செந்தூர் - தாம்பரம் சிறப்பு ரயில் கூடுதலாக ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாத மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.