கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் பிறந்த முத்துக்குட்டிக்கு 22-வது வயதில் கடுமையான நோய்த்தாக்க அவரது தாய் தந்தையரை கடும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் முத்துக்குட்டியின் பெற்றோர்கள் கனவில் மகாவிஷ்ணு தோன்றி ‘திருச்செந்தூர் மாசித் திருவிழாவுக்கு அழைத்து வந்தால் நோய் குணமாகும்’ என்று சொல்லியதாக கூறப்படுகிறது.
இதனை ஏற்று 1833-ஆம் ஆண்டு மாசி மாதத்தில் முத்துக்குட்டியை அவரது பெற்றோர்களும், உறவினர்களும் அவரை சுமந்து திருச்செந்தூருக்கு அழைத்து சென்றனர். உடல் சோர்வு காரணமாக முத்துக்குட்டியை சுமந்து வந்தவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்த நிலையில், தொட்டிலில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கினார் முத்துக்குட்டி, பின்னர் ஓட ஆரம்பித்த அவர் திருச்செந்தூர் கடலுக்குள் ஓடி சென்று கடலுக்குள்ளேயே மறைந்தார் என கூறப்படுகிறது
முத்துக்குட்டி கடலில் இறந்துவிட்டார் என சொந்த பந்தங்கள் சொல்ல ’என் பிள்ளை நிச்சயம் வெளியே உயிருடன் வரும்’ என கரையிலேயே காத்திருந்தனர் முத்துக்குட்டியின் பெற்றோர்கள், ஆனால் கடலில் இருந்து வெளியே வந்தவர் முத்துக்குட்டியாக இல்லாமல் அய்யா வைகுண்டர் என்ற பெயரில் மகாவிஷ்ணுவில் பத்தாவது அவதாரமாக வந்துள்ளதாக கூறி தர்மத்தை நிலைநாட்டப்போவதாக தெரிவித்தார் என கூறப்படுகிறது
கலியுக கடவுள் என மக்கள் அவரை வணங்கத் தொடங்கினர். கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் அப்பகுதியில் வாழும் மக்கள் கடுமையான சாதி கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இடுப்பில் கட்டிய துண்டை தலையில் கம்பீரமாக கட்டிக்கொண்டு வழிபாடு நடத்தவேண்டும் என பரப்புரை மேற்கொண்டார் அய்யா வைகுண்டர். மக்கள் நன்மைக்காக 6 ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார்.
அய்யா வைகுண்டரின் ஆன்மீக புரட்சி பரப்புரை திருவிதாங்கூர் ஆட்சியாளர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் ஆட்சியாளர்களால் அவர் சித்ரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வாசத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்ட அய்யா வைகுண்டர் 1851-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வைகுண்டம் சென்றதாக நம்பப்படுகிறது.
அய்யா வைகுண்டர் வழியில் உருவ வழிபாடு கிடையாது, கடவுள் உனக்குள் இருக்கிறார் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் கண்ணாடி முன் நின்று வழிபடுவது தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. கடவுள் என்பது ஒரு ஆற்றல், மனிதனும் கடவுள்தான், தெய்வமும் கடவுள்தான். அன்பு, அறிவு, பொய்யாமை, சமதர்மம், ஆன்மீகம் ஆகியவை ஒழுக்க நெறியாக போதித்தார் அய்யா வைகுண்டர்.
மன்னன் கேட்கும் அநியாய வரிகளை எதிர்த்தார். அனைவரையும் போல் மேலாடைகளை அணியச் சொன்னார். உடல் தூய்மையை வலியுறுத்தும் வண்ணம், பாகுபாடுகளை களைந்தெறிய அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து ஓர் கிணற்றில் குளிக்க சொன்னார்.சிவனின் நெற்றியில் இருக்கும் ஞானக்கண்ணை குறிக்கும் வகையில் திருநீரை நாமமாக இடம் வழக்கத்தை கொண்டு வந்து தீண்டாமையை ஒழிக்கும் வண்ணம் அனைவருக்கும் தொட்டு திருநீறு நாமம் இடம் வழக்கத்தை கொண்டு வந்தார்.
நான் பெரிது நீ பெரிது என்ற நிச்சயங்கள் பார்ப்போமன்று வான் பெரிது அறியாமல் மாள்கிற வீண் வேதமற்றவர்களாக இந்த உலகம் மாற வேண்டும், உலகம் ஒரு குடைக்கு கீழே இயங்க வேண்டும் என்பது அய்யா வைகுண்டரின் எண்ணமாக இருந்தது.
தனிமனிதன் நெடுங்காலம் இருக்க முடியாது ஆனால் மானுடம் நெடுங்காலம் இருக்கும். மானுடத்தின் மதிப்பீடுகளை தனிமனிதன்தான் வகுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அறம்சார்ந்து வாழ வேண்டும், பொய் பேசக்கூடாது. எளிமையாய் வாழு, காட்டுக்குப்போய் கடும்தவம் செய்ய வேண்டாம், வீட்டுக்குள் இருந்து உன் சொந்த பந்தங்களுடன் முறிவு ஏற்படாமல் புத்திரரோடு பேசி இருந்தால் அதுதான் ஆன்மீகம் என்கிறது அய்யாவழி.