Kamachi Amman temple kanchipuram: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் உடனுக்குடன் தரிசனம் செய்து விட்டு திரும்பும் வகையில் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்
கோவில்களின் நகரம் ஆக இருக்கக்கூடிய காஞ்சிபுரத்தில், மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயிலில் உள்ள மூலவரை தரிசித்தால் ஒரே நேரத்தில் லட்சுமி,சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆகிய மூவரையும் தரிசித்த பலன் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையுமாகும். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
உள்ளூர் மக்கள் பாதிப்பு
கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் வெளியூர் பக்தர்கள் உட்பட உள்ளூர் பக்தர்களும் நீண்ட வரிசையில், காத்திருந்து அம்மனை தரிசிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. சுமார் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை உள்ளூர் மக்களும் வரிசையில் காத்திருப்பதால் உள்ளூர் மக்களுக்கு தனி வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆதார் கார்டு அவசியம்
பக்தர்களின் இக்கோரிக்கையை ஏற்று உள்ளூர் பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு பலகை கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்களாக இருந்தால் அவர்கள் தங்களது, ஆதார் கார்டையோ அல்லது அதன் நகலையோ காண்பித்து தனி வழியில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.தவறினால் பொது வழியில் சென்று தான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மக்கள் கூறுகையில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளூர் மக்களுக்கு என தனி வரிசை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறதாக தெரிவித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் அதிகளவு கூட்டம் இருக்காது. மிக முக்கிய நாட்களில் மட்டுமே கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட்ட நெரிசலில் சிக்கி, செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. உள்ளூர் மக்களுக்கு என்ன தனி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளதாக தெரிவித்தனர்.