இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் நவராத்திரி(Navratri) பண்டிகையும் ஒன்றாகும். மொத்தம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஒரு மகா விழாவாகும். "நவம்" என்பது ஒன்பது என்று பொருள். எனவே, நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள் நீளும் திருவிழா. இந்த ஒன்பது நாட்களில், துர்கை, லட்சுமி, சரஸ்வதி என மூன்று தேவிகள் வழிபடப்படுகின்றனர்.
மூன்று தேவிகளின் வழிபாடு – கல்வி, வீரம், செல்வம்
நவராத்திரி பண்டிகையின் சிறப்பு, மூன்று தேவிகளின் திருவிழாவாக இருப்பதே.
- துர்கை தேவி – மனிதனுக்கு எந்த சிரமத்தையும் தாங்கும் மன வலிமையும், தீய சக்திகளை வெல்லும் வீரத்தையும் அருளுபவள்.
- லட்சுமி தேவி – வாழ்வில் செழிப்பு, வளம், செல்வம் வழங்குபவள்.
- சரஸ்வதி தேவி – அறிவு, கல்வி, கலைகள் ஆகியவற்றின் தெய்வம்.
புராணங்களில், இம்மூன்று தேவிகளும் ஒன்றிணைந்து மகிஷாசுரனை வதம் செய்ததாக குறிப்பிடப்படுகிறது. இதுவே நவராத்திரி கொண்டாட்டத்தின் அடிப்படை கதை.
9 நாட்கள் – 3 பிரிவுகள்
ஒன்பது நாட்கள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன:
- முதல் 3 நாட்கள் – துர்கை தேவிக்கு வழிபாடு வீரத்தையும், மனவலிமையையும் அருளும்.
- அடுத்த 3 நாட்கள் – லட்சுமி தேவிக்கு வழிபாடு செல்வ வளத்தையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும்.
- கடைசி 3 நாட்கள் – சரஸ்வதி தேவிக்கு வழிபாடு அறிவையும், கல்விச்செல்வத்தையும் தரும்.
நவராத்திரி 2025 தேதிகள்
இந்த ஆண்டுக்கான நவராத்திரி பண்டிகை செப்டம்பர் 22, 2025 (திங்கட்கிழமை) அன்று தொடங்கி, அக்டோபர் 2, 2025 (வியாழக்கிழமை) அன்று விஜயதசமியுடன் நிறைவடைகிறது.இந்த ஒன்பது நாட்களில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
கொலு பண்டிகை – பெண்களின் ஆன்மிகக் கூடுதல்
தமிழ்நாட்டு வீடுகளில் பெண்கள் நவராத்திரி காலத்தில் கொலு வைப்பது ஒரு பாரம்பரிய மரபு. வீடுகளில் அழகாக படிநிலைகள் அமைத்து, அதில் பல்வேறு பொம்மைகள் வைத்து அலங்கரிப்பார்கள். பெண்கள், சிறுமிகள் அனைவரும் ஒன்றுகூடி பூஜை செய்து, பாடல்கள் பாடி, பரிசுப் பொருட்கள் பரிமாறுவார்கள். இது சமூக மற்றும் ஆன்மிக உறவுகளை வலுப்படுத்தும் விழாவாகவும் பார்க்கப்படுகிறது.
ஆயுதபூஜை – தொழிலாளர்களின் சிறப்பு நாள்
நவராத்திரியின் எட்டாவது நாள் ஆயுதபூஜை ஆகும். இந்த நாளில்:
- தொழில் நிறுவனங்களில் இயந்திரங்கள், கருவிகள் அனைத்தும் சுத்தம் செய்து பூஜை செய்யப்படும்.
- வீட்டில் புத்தகங்கள், பேனாக்கள் வைத்து சரஸ்வதி தேவியை வழிபடுவார்கள்.
- வாகனங்கள், ஆயுதங்கள் அனைத்துக்கும் பூஜை நடத்தப்படும்.
தமிழகத்தில் ஆயுதபூஜை மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். " செய்யு, தொழிலே தெய்வம்" என்ற எண்ணத்தோடு மக்கள் தங்களின் தொழில் கருவிகளை வணங்குவது இந்த நாளின் தனிச்சிறப்பு.
விஜயதசமி – புதிய தொடக்கத்தின் நாள்
நவராத்திரியின் இறுதி நாள் விஜயதசமி. தீமையின் மீது நன்மை வென்றதைக் குறிக்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கான (பள்ளி சேர்க்கை) நடைபெறும்.புதிய முயற்சிகள், தொழில்கள் ஆரம்பிக்க சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.பல இடங்களில் சாமி வீடு கொலு நிறைவு பெறும்.
விரதம் மற்றும் நம்பிக்கைகள்
நவராத்திரியில் பலரும் விரதம் இருந்து பூஜை செய்வார்கள். இதனால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனால் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் விரதம் இருக்காமல் வழிபாடு செய்வதே சிறந்ததாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.