கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் வாழ்வில் நன்மைகள் கைகூடும் என்பது நம்பிக்கை. பொதுவாக ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் நோன்பிருந்து கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும். நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும், எல்லாம் நொடியில் நீங்கி, எதிரிகள் ஒழிந்து முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்க வேண்டும். இம்முறை திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில், 6 நாள் ஸ்கந்த சஷ்டி விரதம் அக்டோபர் 25 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. சூரசம்ஹாரம் அக்டோபர் 30 தேதி வருகிறது. சஷ்டி திதி அக்டோபர் 30 ஆம் தேதி காலை தொடங்கி அக்டோபர் 31 ஆம் தேதி காலை முடிவடைகிறது
என்ன சாப்பிடலாம்?
இதனை உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் என்பார்கள். அதனால் உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நார்த்தம் பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது. கந்தசஷ்டி தினம் தொடங்கி சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவை கொஞ்சமாக உட்கொண்டு முருகனை நினைத்து விரதம் இருக்க வேண்டும். மதியம் ஒரே ஒரு முறை மட்டும் பச்சரிசி உணவுடன் தயிர் கொஞ்சம் சேர்த்து உண்ண வேண்டும். காலை, இரவு நேரத்தில் பால், பழங்கள் மட்டும் கொஞ்சம் சாப்பிடலாம். ஆனால், வயதானவர்கள், நோய் உள்ளவர்கள் விரதத்தின் போது உடல் நிலைக்கு தகுந்தபடி நடந்து கொள்ள விதிவிலக்குகள் உண்டு. பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு. ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
செய்யவேண்டியவை
குளிர்ந்த நீரில் தினமும் இரண்டு நேரமும் குளிக்க வேண்டும். தினமும் காலை மாலை வீட்டில் இருக்கும் முருகன் படத்திற்கு பூ வைத்து தீபம் ஏற்றி கற்பூரம் காட்டி பூஜை செய்ய வேண்டும். காலை, மாலை கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். மாலை நேரத்தில் வீட்டில் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். முடிந்த வரை தினம் ஒருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யவேண்டும், அல்லது கேட்கவேண்டும்.
தவிர்க்கவேண்டியவை
விரத நாட்களில் அசைவம் கூடாது, மது, புகை கூடாது, தாம்பத்ய உறவு கொள்ள கூடாது, கெட்ட வார்த்தை பேசக்கூடாது, யாரிடமும் கோபமாக பேசக்கூடாது, இரவு தரையில் கம்பளம் விரித்துதான் தூங்கவேண்டும், கட்டில் மெத்தையில் உறங்கக் கூடாது. முடிந்த வரை காலனி அணிவதை தவிர்ப்பது நலம்.
விரதத்தை முடிப்பது எப்படி?
சஷ்டி விரதத்தின் ஆறாவது நாள் பக்தர்கள் திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர் நிலைகளிலோ நீராடலாம். அந்த நாளில் இரவு அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து முடிந்தால் மாவிளக்கு போடலாம். அப்போது பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். சிலரோ அடுத்தநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேதியத்தை தரிசனம் செய்த பின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவார்கள்.
என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
முருகன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் கைகூட இந்த விரத முறைகளை கடைபிடிக்க வேண்டும். இதனை செய்தால் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கைகூடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், கடன் தொல்லை நீங்கும். குழந்தை வரம் வேண்டும் தம்பதியினருக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடி வரும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்