கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ சனீஸ்வர பகவானை மனம் உருகி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்


 


 




தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை மாலை சிறப்பு பூஜையுடன் லட்சார்ச்சனை நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக  20.12.2023 புதன்கிழமை மாலை 5:20 மணி அளவில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் "மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி" ஆனதை ஒட்டி ஆலயத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சனீஸ்வர பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார்.


 


 




அதை தொடர்ந்து மாலை 5:25 மணி அளவில் சனீஸ்வர பகவானுக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவை சிறப்பிக்கும் வகையில் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு சென்றனர்.


 




 


நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அருகே பல்வேறு திருமண மண்டபத்தில் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.