சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்துள்ள உடையாப்பட்டி பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வேடியப்பன், அம்சாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சமீப காலமாக நடைபெற்று வந்த புணரமைப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் உடையாபட்டி கருமாரியம்மன் திருக்கோயிலில் இருந்து தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை மகா சங்கல்பம் புண்யாகவசனம் செய்யப்பட்டு முதற்காலை யாக பூஜைகள் தொடங்கினர்.
தொடர்ந்து காலை 6 மணி அளவில் உடையாபட்டி கருமாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு, யாக சாலையில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட தீர்த்த கலசம் மங்கல வாத்தியங்கள் இசைக்க வேத மந்திரங்கள் முழங்க இரண்டாம் காலை ஆக பூஜை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து ஆகன விதிப்படி கோபுர கலசங்கள் மீது தீர்த்த நீர் ஊற்றப்பட்டது.
இதில் உடையாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து சாமி அருள் பெற்று சென்றனர். அப்போது டிரோன் மூலம் பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ வேடியப்பன், அம்சாரம்மனுக்கு வெள்ளிக்கவசம் அனுபவிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோன்று, சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழாவும் நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது. சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் குடமுழுக்கு விழா நடைபெற்று உள்ளது. இதனை காண்பதற்காக சேலம் மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கோட்டை மாரியம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
இந்த குடமுழுக்கு விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தின் போது அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் 1200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.