காஞ்சிபுரம் செக்குபேட்டை சாலியர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டனர்.

 

மகா கும்பாபிஷேக விழா

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : பெரிய காஞ்சிபுரம் குலால மரபினர் சார்பில் சேக்குப்பேட்டை சாலியர் தெற்கு தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயில். கடந்த ஓராண்டுக்கு முன்பு திருக்கோயில் குலால மரபினர் மற்றும் பல்வேறு உபயதாரர்கள் மூலம் புனரமைக்கப்பட்டு ராஜகோபுரம், மூலவர் விமான கோபுரம், பரிவார மூர்த்திகள் , கொடிமரம் என பல தெய்வ பிரகாரங்கள் அமைக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது. இதன் மகா கும்பாபிஷேக விழா கடந்த 25-ஆம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக நான்கு கால ஹோம பூஜைகள் நடைபெற்றன.

 


ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டனர்


 

இன்று காலை 8 மணிக்கு நான்காம் கால பூஜை நிறைவு பெற்று பூர்ணாஹிதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 15 கலச புறப்பாடுகளும், அதனுடன் ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமான கோபுரம் கலசங்களும் சிவாச்சாரியார்களால் கொண்டு செல்லப்பட்டு புனித நீர் கோபுரம் மற்றும் விமானம் உள்ளிட்ட அனைத்து தெய்வ  ஆலயங்களுக்கும் காலை 10 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.




 

திருவீதி உலா

 

மகா கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவிலுக்கு வந்திருந்து புனித நீர் பெற்று ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு அன்னதான பிரசாதத்தை பெற்று சென்றனர். இதனைத் தொடர்ந்து மாலை திருக்கல்யாண உற்சவம் அதனைத் தொடர்ந்து திருவீதி உலா நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். வேறு எங்கும் காணாத வகையில் காஞ்சிபுரம் நகரில் மையப்பகுதியில் ராஜகோபுரம், மூலவர் விமான கோபுரத்துடன் ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 



உத்திரமேரூர் அருகே ஸ்ரீ. தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைப்பெற்றது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மல்லிகாபுரம் கிராமத்தில் பழமையான தேவி கருமாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சிறிய  ஆலயமாக இருந்து வந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து பெரிய ஆலயமாக எழுப்பி இன்று கும்பாபிஷேக விழா நடந்த தீர்மானித்தார்.  அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக வாஸ்து ஹோமம் , கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனைகள், நடைபெற்றது. 



 

அதைத்தொடர்ந்து இன்று  காலை முதல் மகா பூர்ணாஹுதி, நாடி சந்தனம்,கோ பூஜை, யாக சாலை பூஜைகள் உள்ளிட்டவை நடந்தது. பின்னர், காலை 10:00 மணியளவில் யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் தலைமையில் கலசம் புறப்பட்டு கோவிலை சுற்றி வந்து விமான கோபுரத்தில் புனித கலசநீர் ஊற்றி மூலவருக்கு தீபாராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து பக்தர்களின் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 

ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மல்லிகாபுரம் கிராமத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.