சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் யாக சாலை பூஜை துவங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோயிலில் இருந்து அண்ணன் முறை சீர்வரிசையாக பட்டு ஆடைகள், நகை, விளக்கு, பூ மற்றும் பழ வகைகளை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் யாகசாலையில் வைத்தனர்.



தொடர்ந்து நாளை சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குடமுழுக்கு விழாவை காண வருகை தருவார்கள் என்பதால் சேலம் மாநகர காவல்துறை சார்பில் திருக்கோயில் வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்று வழிபாடு செய்யும் வகையிலும் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருக்கோயில் வழியாக செல்லும் போக்குவரத்து நாளை தற்காலிகமாக தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குடமுழுக்கு விழாவின்போது டிரோன் மூலம் கோபுரங்களுக்கு மலர் தூவ சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள்


பழைய பேருந்து நிலையத்தின் முதல் தளம் - நான்குசக்கர வாகனங்கள் மற்றும் பழைய பேருந்து நிலையத்தின் அடித்தளம் (Under Ground)- இருசக்கர வாகனங்கள், போஸ் மைதானம், பேலஸ் தியேட்டர் அருகில், சி.எஸ்.ஐ பள்ளி வளாகம் என பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள்


திருக்கோவில் குடமுழுக்கு தினத்தன்று பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் வகையில். பழைய பேருந்து நிலையம் வழியாக வரும் பக்தர்கள், பழைய பேருந்து நிலையத்தினை ஒட்டி உள்ள, தெற்கு புற நுழைவு வாயில் வழியாக சாமி தரிசனம் செய்து மீண்டும் அதே வழியாக வெளியே செல்லலாம். திருவள்ளுவர் சிலை/கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக வரும் பக்தர்கள் கோவிலின் வடக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து, கோவிலின் மேற்கு பக்க வாயிலின் வழியாக வெளியே செல்லலாம்.



திருக்குடமுழுக்கு புனிதநீர் தெளிப்பதற்கானசிறப்பு ஏற்பாடுகள்:


திருக்கோவில் குடமுழுக்கு விழாவை காணவரும், பக்தர்கள் அனைவரின் மீதும் தாங்கள் நிற்கும் இடத்திலேயே புனிதநீரை தெளிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


பக்தர்களின் காலணிகள் பாதுகாப்பிற்கான சிறப்பு ஏற்பாடுகள்: 


பக்தர்கள் தரிசனம் செய்து செல்வதை எளிமையாக்கும் வகையில் அவர்களது காலணிகளை பாதுகாக்க 


(1) கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவில் அருகில் 


(2) திருவள்ளுவர் சிலை அருகில் 


(3) பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் தங்கள் காலணிகளை கோவில் அருகே அணிந்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


பக்தர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்:


பக்தர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யும் பொருட்டு, கோவிலைச் சுற்றி பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நகரின் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் உதவிக்காக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படும் பொதுமக்கள் அங்குள்ள காவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.