உசிலம்பட்டி அருகே 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் எழுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான எதிர்சேவை நிகழ்வு - ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
எதிர்சேவை நிகழ்வை காண மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாதி மத, பேதமின்றி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முத்தாலம்மன் திருக்கோவில்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ளது,பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் திருக்கோவில். இந்த கோவிலின் உற்சவ விழாவை எழுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து சாதி மத பேதமின்றி வெகுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.
எதிர்சேவை நிகழ்வு
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான எதிர்சேவை நிகழ்வு, ஆத்தங்கரைப்பட்டி கண்மாய் அருகே வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக எழுமலை முத்தாலம்மன் கோவிலிலிருந்து சப்பரத் தேரில் முத்தாலம்மன் சிலை ஊர்வலமாக எடுத்து வர, இதே போன்று ஆத்தங்கரைப்பட்டியில் உள்ள முத்தாலம்மன் சிலையை கண்மாய் கரைக்கு எடுத்து வந்து ஆத்தங்கரைப்பட்டி கண்மாய் அருகில் எதிர்சேவை நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வை காண மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாதி மத, பேதமின்றி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடு
இந்த இரண்டு நாள் திருவிழாவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வண்ணம், டி.ஐ.ஜி. ரம்யாபாரதி மற்றும் மதுரை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் தலைமையில் சுமார் 1300 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த திருவிழாவை முன்னிட்டு சட்டம் - ஒழுங்கு காரணமாக எழுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள உத்தப்புரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி விலக்கு, எம்.கல்லுப்பட்டி மற்றும் துள்ளுக்குட்டி நாயக்கணூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 5 டாஸ்மாக் கடைகள் மற்றும் எழுமலையில் உள்ள ஒரு தனியார் ஏசி பார் ஆகியவற்றை இரண்டு நாட்கள் மூட மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எழுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழாவிற்காக 18 கிராமங்களிலிருந்து சிலை எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்த 18 கிராமங்களில் ஒரு கிராமமான உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் சிலை எடுத்து கொண்டாடுவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இகாரணமாக கடந்த 2015 முதல் இந்த கிராமத்தில் கோயில் திருவிழா நடத்தப்படாமல் இருந்த சூழலில், இந்தாண்டு போலீஸ் பாதுகாப்புடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க - Ayudha Pooja 2023: தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு..சாப்பிட்ட இலையை எடுத்த மண்டல குழு தலைவர் - காஞ்சியில் நெகிழ்ச்சி
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - NIA Arrest : ‘ஹோட்டல் ஊழியர் போல பதுங்கியிருந்த பயங்கரவாதி?’ தேனியில் அதிரடி கைது..!