தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் விளங்குகிறது. சேலம் மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டு பட்டிக்கும் நாயகியாக விளங்கக்கூடிய கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. 



சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்த குட ஊர்வலம் எடுத்து வரும் நிகழ்வு நடந்தது. தீர்த்த குணமானது திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்த யானை மாசிலா மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலமானது வள்ளுவர் சிலை, கடைவீதி அக்ரகாரம் பெரிய கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் வந்தடைந்தது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்தும், முளைப்பாரி பயிரை எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். மேளதாளங்கள் முழங்க அம்மன் வேடமிட்டு பரவசத்தில் நடனமாடிய பக்தர்களை பொதுமக்கள் கண்டுகளித்தனர். கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் ராஜகோபுரம் மற்றும் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.



குறிப்பாக சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் கருவறை பின்புறம் பண்டிகை காலங்களில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று இந்து அறநிலைத்துறை சார்பாக சுவற்றில் 20 அடியில் மாரியம்மனின் திருவுருவம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோட்டை மாரியம்மன் திருக்கோவில் கருவறை மற்றும் கட்டுமான பணிகள் அனைத்தும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பணிகள் முழுமை பெற்றுவிடும் என கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தர வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுத்தார். 


கடந்த 18 ஆம் தேதி புதிய கொடி மரம் நிறுவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம் முளைப்பாரி இடுதல் உள்ளிட்ட வைப்பவங்கள் நடைபெற்ற பின்னர் கொடி மரத்திற்கான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கொடி மரம் நிறுவப்படும் இடத்தில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் பதியப்பட்டது. குருக்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்தினை வேதங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் புதிய கொடி மரம் நிறுவப்பட்டது. மேலும் புதிய கொடி மரத்திற்கும் அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.