காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவ திருவிழா 9-ம் நாள். ஸ்ரீதேவி, பூதேவி, பெருந்தேவி தாயாருடன், கிருஷ்ணர் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளி பக்தர்களுக்கு காட்சியளித்த வரதராஜ பெருமாள்.
நவராத்திரி பண்டிகை
கடந்த வாரம் முதல் நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி பண்டிகை முடிவுக்கு வரும் நிலையில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகை என்பது 9 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். அதில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபட்டு வணங்குவர். ஒரு மனிதனுக்கு கல்வி, செல்வம், ஞானம் ஆகிய மூன்றும் முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் வழிபடுவதற்காக பூஜை பொருட்களை வாங்க சந்தைக்கு குவிந்துள்ளனர். முக்கியமாக இன்று வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொட்டு வைத்து பூஜை செய்வார்கள். சாமிக்கு நெய்வேத்தியமாக பொரி, கடலை, அவல், பழங்கள், வடை, பாயாசம், ஆகியவற்றை வைத்து வழிபடுவார்கள். ஆயுத பூஜை முன்னிட்டு நேற்று முதல் விற்பனை களைக்கட்டியுள்ளது. பூஜை நாட்கள் என்பதால் பழங்கள், வாழை கன்றுகள், தோரணங்கள் மற்றும் பூக்களின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில்
காஞ்சிபுரம் ( kanchipuram News ): 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி உற்சவத்தின் 9-ம் நாளான நேற்று வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயாருக்கு, சிறப்பு திருமஞ்சனங்கள் செய்யப்பட்டு, பட்டாடை உடுத்தி,வைர, வைடூரிய, திருவாபரணங்கள் அணிவித்து பல்வேறு மலர் மாலைகள்,சூட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
ஸ்ரீதேவி, பூதேவி, பெருந்தேவி தாயாருடன், மேளதாளங்கள், முழங்க கோவில் வளாகத்தில் உலா வந்து, நூற்றுக்கால் மண்டபத்திற்கு வரதராஜ பெருமாள் எழுந்தருளி, ஊஞ்சல் சேவை கண்டு அருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நூற்றுக்கால் மண்டபத்தில் தேவியர்களுடன் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த, வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் கூடி நின்று சுவாமி தரிசனம் செய்து வணங்கி, தீர்த்தம்,சடாரி, பிரசாதங்களை பெற்றுச் சென்றனர். இதேபோன்று காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மிகச் சிறப்பாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது